Last Updated : 05 Jan, 2016 09:44 AM

 

Published : 05 Jan 2016 09:44 AM
Last Updated : 05 Jan 2016 09:44 AM

தீவிரவாத பிடியில் பெல்ஜியம் - 5

முதலாம் உலகப் போர் தொடங்கியது. ஜெர்மனி, பெல்ஜியத்தை ஆக்கிர மித்தது. இத்தனைக்கும் பெல்ஜியம் இந்தப் போரில் எந்த சார்பு நிலையும் எடுக்கவில்லை. பிறகு ஏன் ஜெர்மனி அந்த நாட்டை ஆக்கிரமிக்க வேண்டும்?

ஒரு நடுநிலைமை நாட்டை ஜெர்மனி ஆக்கிரமிக்கும் என்பதை எதிரணி எதிர்பார்த்திருக்காது. இதைப் பயன்படுத்திக் கொண்டு பெல்ஜியம் வழியாக பிரான்ஸின் தலைநகரான பாரீஸை கைப்பற்றி விடலாம் என்பதுதான் ஜெர்மனி யின் திட்டம். இதனால்தான் அது பெல்ஜியத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

ஆனால் இதுவே ஜெர்மனிக்கு வேறொரு விதத்தில் பாதக மாக அமைந்தது. அந்த பாதகத் துக்கு காரணம் 1839ல் கையெழுத் திடப்பட்டிருந்த லண்டன் உடன் படிக்கை.

ஐரோப்பிய கூட்டமைப்பு (Concert of Europe), நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கையெழுத்திட்ட ஒப்பந்தம் இது. இதன் ஒரு பகுதியாக பெல்ஜியத்தின் சுதந்திரத்தையும் நடுநிலைத் தன்மையையும் பிற ஐரோப்பிய சக்திகள் அங்கீகரிப்ப தோடு அவற்றிற்கான உத்தரவாதத் தையும் அளித்திருந்தன. பெல் ஜியம் நடுநிலை வகிக்கும் நிலையில் யாராவது அதை ஆக்கிரமித்தால் அந்த உடன்படிக்கையில் கையெ ழுத்திடும் பிற நாடுகள் பெல்ஜியத் தின் உதவிக்கு வரும் என்றது அந்த உடன்படிக்கை.

இதன்படி பெல்ஜியத்துக்கு ஆதரவாக பிரிட்டன் களத்தில் குதித்தது. அதற்குமுன் நடந்த வற்றை இப்போது பார்ப்பது அவசியம்.

1914 ஆகஸ்ட் 2-ம் தேதி ஜெர்மன் அரசு பெல்ஜியத்திடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தது. ‘’பெல்ஜிய எல்லைக்குள் எங்கள் ராணுவம் நுழைந்து செல்வதற்கு உங்கள் அரசு அனுமதிக்க வேண்டும்’’ என்றது. பெல்ஜியம் அரசு இதற்கு அழுத்தமாக மறுப்பு தெரிவித்தது.

இதை எதிர்பார்த்திருந்த ஜெர்மன் ராணுவம், பெல்ஜியத்தின் மறுப்பு பற்றிக் கவலைப்படாமல் அதற்கு அடுத்தநாளே பெல்ஜி யத்துக்குள் நுழைந்தது.

அளவில் ஒப்பிடும்போது ஜெர்மானிய ராணுவத்தில் பத்தில் ஒரு பங்குகூட இல்லை பெல்ஜிய ராணுவம். என்றாலும் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு பெல்ஜியத்தால் தாக்குப் பிடிக்க முடிந்தது. இந்த காலகட்டத்துக்குள் பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் ராணுவங்கள் பெல்ஜியத்துக்கு ஆதரவாக அங்கு வந்து சேர்ந்து விட்டன.

ஜெர்மன் ராணுவம் தங்கள் எல்லைக்குள் முன்னேறாதபடி தடுப்பதற்காக பாலங்களையும் ரயில்வே தடங்களையும் இடித்துத் தள்ளினர் பெல்ஜியம் தரப்பினர். இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத ஜெர்மன் ராணுவம் கண்ணில் கிடைத்த பெல்ஜியக்காரர்களை எல்லாம் சுட்டு வீழ்த்தியது. வழியில் தென்பட்ட பெரும் கட்டிடங்களை தீக்கு இரையாக்கியது.

காலப்போக்கில் பெல்ஜியத்தின் 95 சதவீத பரப்பை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. பெல்ஜியத்தைச் சேர்ந்த பலரும் நெதர்லாந்து, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.

பெல்ஜியம் அரசு நாட்டுக்கு வெளியில் .இருந்து கொண்டே அரசாளத் தொடங்கியது. இந்தப் போரின்போது பெரும்பாலான பெல்ஜிய அரசு அதிகாரிகள் தங்கள் நாட்டிலேயே தங்கிவிட்டனர். இவர்கள் வெளிநாட்டிலிருந்து செயல்பட்டுக் கொண்டிருந்த அரசின் ஆணைகளைக் கேட்டுக் கேட்டு அவற்றை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் நாடாளு மன்றத்தையே முடக்கியது ஜெர்மனி. பல்கலைக்கழகங்களை இழுத்து மூடியது. இதற்கு மாற்றாக டச்சு மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்கியது.

எனினும் கலவரமான சூழலால் நாட்டின் பல பெரும் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ஜெர்மனி தன் நாட்டிலிருந்து நிர்வாகிகளை அனுப்பி பெல்ஜியத் தொழிற்சாலைகளை மேம்படுத்த முயற்சித்தது. ஆனால் பெல்ஜிய நாட்டைச் சேர்ந்த தொழிலாளிகள் ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தனர். அவர்கள் அரைகுறையாகத்தான் தங்கள் பணிகளை நிறை வேற்றினர். ஜெர்மனி அடுத்த அடாவடித்தனத்தில் இறங்கியது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான பெல்ஜியத் தொழிலாளிகளை ஜெர்மனிக்கு அனுப்பியது.

தங்கள் நாட்டுக்குள் நுழைந்த ஜெர்மன் ராணுவ வீரர்களை பெல்ஜிய மக்கள் மதிக்கவில்லை. அதுமட்டுமல்ல ராணுவ வீரர்கள் குறைந்த எண்ணிக்கையில் எதிர் படும்போதெல்லாம் அவர்களைத் தாக்கவும் செய்தார்கள்.

கொதித்து போன ஜெர்மானிய ராணுவம் 6,000 பெல்ஜிய மக்களை தூக்கில் ஏற்றியது. அப்போது பெல்ஜியத்தில் பிரபலமாக விளங்கிய அடோல்ப்ஸ் மாக்ஸ் என்ற அரசியல்வாதியையும் ஹென்றி பிரெனே என்ற சரித்திர ஆய்வாளரையும் ஜெர்மனிக்கு கடத்திச் சென்று அவர்களை பிணைக் கைதிகளாக்கியது.

‘எங்கள் ராணுவத்துக்கு முறை யாக அனுமதி கொடுத்திருந்தால் நாங்களாகவே பெல்ஜியத்தைத் தாண்டிச் சென்றிருப்போம். மாறாக எங்களுக்கு எதிராகச் செயல்பட்ட தால் பெல்ஜியம் இந்தத் துன்பத்தை அனுபவிக்கிறது’ என்று நியாயம் பேசினார்கள் ஜெர்மன் ராணுவத் தினர்.

பெல்ஜியத்தில் நடைபெற்ற ஜெர்மன் ராணுவத்தினரின் அடாவடிச் செயல்களை பிரிட்டன் உலகுக்குத் தெரியப்படுத்தியது. பெல்ஜியத்தைக் காப்பாற்றும் பொறுப்பு தனக்கு உண்டு என்று கருதிய பிரிட்டன், ஒரு விசாரணைக் குழுவை பெல்ஜியத்துக்கு அனுப் பியது. அந்தக் குழு ‘ப்ரைஸ் அறிக்கை’ என்று பின்னால் அறியப் பட்ட ஒன்றை வெளியிட்டனர். ஜெர் மனியின் அராஜகங்களை விரிவா கவே வெளிக் கொண்டு வந்தது அந்த அறிக்கை. பல ஜெர்மன் ராணுவ வீரர்களின் டைரிகளிலி ருந்து சில பக்கங்களை ஆதாரமா கவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டி யிருந்தது.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x