Published : 02 Dec 2013 09:56 AM
Last Updated : 02 Dec 2013 09:56 AM

நியூயார்க்கில் மெட்ரோ ரயில் தடம்புரண்டு 4 பேர் பலி

நியூயார்க்கில் மெட்ரோ ரயில் தடம் புரண்டதில், அதில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 67 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நியூயார்க் அருகே ஸ்புய்டென் டியுவில் ரயில் நிலையம் அருகே பிரோன்ஸ் பகுதியில் வந்து கொண்டிருந்த மெட்ரோ ரயில் ஒன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.20 மணியளவில் திடீரென தடம் புரண்டது.

ஹட்சன் நதியோரம் ஒரு வளைவு பகுதியில் வந்து கொண்டிருந்த போது ரயிலின் 5 பெட்டிகள் தடம்புரண்டன. இதில் 4 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 67 பேர் படுகாயமடைந்தனர்.

ரயிலில் பயணம் செய்த ஜோயல் ஜாரிட்ஸ்கி கூறுகையில், “நியூயார்க்கில் நடைபெறும் பல் மருத்துவ மாநாட்டில் பங்கேற்பதற்காக கிராண்ட் சென்ட்ரல் நிலையத்துக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தேன். சம்பவம் நடந்தபோது தூங்கிக் கொண்டிருந்தேன். திடீரென ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டேன். நான் பயணம் செய்த பெட்டி கவிழ்ந்து கிடப்பதை உணர்ந்தேன். எனது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

மீட்புப் பணி:

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில் பெட்டிகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அதிருஷ்டவசமாக அருகில் உள்ள ஹட்சன் நதியில் ரயில் பெட்டிகள் விழாததால் பெரும் எண்ணிக்கையில் ஏற்படவிருந்த உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ரயிலில் பயணம் செய்த பிராங் டாடுல்லி கூறுகையில், “வளைவில் திரும்பியபோது ரயில் அதி வேகமாக சென்றது. அதனால்தான் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு இருக்கும் என நினைக்கிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x