Published : 03 Dec 2013 12:00 AM
Last Updated : 03 Dec 2013 12:00 AM
விவசாய மானியம், உணவுப் பாதுகாப்பு குறித்து முக்கிய உடன்பாட்டை மேற்கொள்வது தொடர்பான உலக வர்த்தக அமைப்பு கூட்டம், இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இதில், ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் முன்வைக்கும் யோசனைக்கு இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் ஆட்சேபம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக வர்த்தக அமைப்பு கூட்டம் இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) தொடங்குகிறது. இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் அமைச்சர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள்.
டிசம்பர் 6-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்க இந்தியா சார்பில் மத்திய தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தலைமையிலான 30 பேர் கொண்ட குழுவினர் பாலி சென்றுள்ளனர். இந்த கூட்டத்தில் உணவுப் பாதுகாப்பு, விவசாயத் துறைக்கு அளிக்கப்படும் மானியங்கள் தொடர்பானவை முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
விளைபொருள் சார்ந்த வர்த்தகத்தை உலக நாடுகளிடையே எளிதாக்குவது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. சரிந்து வரும் தங்களின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் விதமாக அந்நாடுகள் இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் உலக அளவில் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு வர்த்தகம் நடைபெற ஊக்குவிக்கப்படும் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தெரிவித்து வருகின்றன. இதே கருத்தை உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் ராபர்டோ அஸெவும் வலியுறுத்தி வருகிறார். பல அடுக்கு வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்துக்கு பாலியில் நடை பெறும் கூட்டத்தில் ஆதரவு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித் துள்ளார் ராபர்டோ. இந்த விவகாரம் தொடர்பாக ஆட்சேபம் தெரிவிக்கும் நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
10 சதவீத மானியம்
ஜெனிவாவில் முன்வைக்கப்பட்ட ஒப்பந்த ஷரத்துகளின்படி இந்த அமைப்பில் உள்ள நாடுகள் விவசாயம் தொடர்பாக அளிக்கப்படும் மானியத்தை, அத்துறையின் ஒட்டுமொத்த உற்பத்தி அளவில் 10 சதவீதம் மட்டுமே வழங்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாலியில் நடை பெறவுள்ள கூட்டத்தில் உணவுப் பாதுகாப்பு, விவசாய மானியம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பாக பேசுவதற்கான அதிகாரத்தை மத்திய தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவுக்கு மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் யோசனை
வளரும் நாடுகள் ஆட்சேபம் தெரிவிக்கக்கூடிய ஷரத்துகளை அமல்படுத்த 4 ஆண்டுகள் அவகாசம் அளிக்கும் வகையிலான அமெரிக்காவின் யோசனையை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கெனவே ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன. விவசாய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையில் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று வளரும் நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விஷயத்தில் சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட ஜி-33 அமைப்பில் உள்ள நாடுகள் தனக்கு ஆதரவு அளிக்கும் என இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில், வளரும் நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஜி-33 அமைப்பு நாடுகளின் யோசனையை அமெரிக்காவும், கனடாவும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. சர்வதேச சந்தையில் உணவு தானியங்கள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டால், விளைபொருள்களின் விலையை நிர்ணயிப்பதில் பாதிப்பு ஏற்படும் என ஜி-33 நாடுகள் கூறி வருகின்றன.
விவசாய ஒப்பந்தத்தில் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், விவசாயிகளுக்கு பாதகமான ஓர் ஒப்பந்தத்துக்கு இந்திய அரசு ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உணவுப் பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பான விவகாரத்தில் வளர்ந்த, வளரும் நாடுகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு உடன்பாடு எட்டப்படும் என உலக வர்த்தக அமைப்பு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT