Published : 19 Dec 2013 11:15 AM
Last Updated : 19 Dec 2013 11:15 AM
புதின் இதனை எதிர்பார்த்திருக்க மாட்டார். இந்த வருஷம் முழுக்க மிகுந்த சாமர்த்தியமாகக் காய்கள் நகர்த்தி உலகம் முழுதும் தன்னையும் ரஷ்யாவையும் எப்போதும் கவனிக்கும்படியாகவே செய்துகொண்டிருந்தவருக்கு, வருஷக் கடைசியில் ஒரு பெரிய அதிர்ச்சி. யார் கண்டது? அவருக்கு இப்போது என்னவாவது கிரக சஞ்சாரப் பிரச்னை இருக்கும்.
ரஷ்யா மற்றும் புதினின் நித்ய குடைச்சல் கேந்திரம் செச்னியா என்பது தெரியுமல்லவா? அந்த செச்னியப் போராளிகள் போன வருஷக் கடைசியில் சிரியாவில் சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டு சிந்தை இரங்கி, சிரியாவுக்கு சண்டை போடக் கிளம்பிப் போனார்கள்.
போராளிகள் சிரியாவுக்குப் போவதிலோ அல்லது வேறெங்கும் போவதிலோ புதினுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. அவரே விசா வாங்கிக் கொடுத்து ஏரோப்ளேனில் பிசினஸ் கிளாஸ் டிக்கெட் எடுத்துக் கொடுத்து, கட்டு சாதப் பொட்டலத்துடன் அனுப்பி வைக்கத் தயார்தான். உள்நாட்டில் குடைச்சல் இல்லாமல் இருந்தால் போதாதா?
உண்மையிலேயே சிரியாவுக்குப் போன செச்னியப் போராளிகளுக்கு புதின் அரசாங்கம் பல ரகசிய சகாயங்கள் செய்து அனுப்பிவைத்ததாகத்தான் பேச்சு. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த வருஷம் முழுதும் செச்னியாவில் முன்னத்தனை யுத்த பேரிகை முழக்கங்கள் இல்லாதிருந்தன. இந்த அவகாசத்தைப் பயன்படுத்திக்கொண்டு ரஷ்யாவும் தனது அண்டை அயல் நல்லுறவுகளைப் புதுப்பித்து, பரபரவென்று அரசியல் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் துரிதப்படுத்தத் தொடங்கியது.
இந்தப் பக்கம் செச்னியப் போராளிகளை சிரியாவுக்கு அனுப்பிவிட்டு அந்தப் பக்கம் அமைதிக்கான நோபல் பரிசு புதினுக்குத்தான் என்று உலகை எதிர்பார்க்கச் செய்யுமளவுக்கு ஆகிருதிக் கட்டுமானப் பிரயத்தனங்கள் அரங்கேறின. என்ன பிரயோசனம்?
இன்றைக்கு செச்னியப் போராளிகள் ஊருக்குத் திரும்பிவருகிறோம் என்று சொல்லிவிட்டார்கள். அங்கே அவர்களுடைய தலைமைத் தளபதியாக இருக்கும் சலாவுதீனும் வடக்கு காகசஸ் பிராந்தியத்தின் சக்திமிகு போராளித் தலைவரான டோக்கு உமரோவும் ஓர் அவசர ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறார்கள். உள்ளூரில் டப்பா டான்ஸ் ஆடுகிறது. சிரியாவில் செய்துகொண்டிருக்கும் சமூக சேவை போதும். உடனே வீரர்களை செச்னியாவுக்குத் திருப்பி அனுப்புங்கள். இங்கே யுத்தம் தொடங்கியாக வேண்டும்.
தொடங்கிய இடத்தில் ஜிஹாதைப் பாதியில் நிறுத்திச் செல்லக்கூடாது என்பது இந்தப் போராளிகளுக்கு இருக்கிற ஒரு கட்டுப்பாடு. ஆனால் உமரோவ் இதை லாஜிக் பாயிண்ட் கொண்டு காலி பண்ணியிருக்கிறார். சிரியாவில் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே நாம் செச்னியாவில் ஆரம்பித்துவிட்டோம். இங்கே பாதியில் விட்டுவிட்டு அங்கே போனது சரியென்றால், அங்கும் பாதியில் புறப்பட்டு வருவது சரியே.
யார் பதில் பேச முடியும்?
எனவே சிரியாவில் உள்ள செச்னியப் போராளிகள் ஊருக்குத் திரும்புகிறார்கள். இது ரஷ்ய அதிபருக்கு வயிற்றில் புளி கரைக்கும் சங்கதி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கரைத்த புளியில் ரசம் வைக்க வேண்டியதுதான். வேறு வழியில்லை.
ஆயுதப் போராளிகளைப் போஷித்து ஊக்குவித்து தனக்கு சாதகமாகப் பயன்படுத்துவதென்பது அமெரிக்கா ஆரம்பித்து வைத்த கலாசாரம். எண்பதுகளின் தொடக்கத்தில் ஆப்கனில் அவர்கள் நிகழ்த்திய இந்த வைபவத்தைப் பார்த்துத்தான் அகில உலகமே இதைப் பாடமாகப் பயின்றது. ரஷ்யாவும் விலக்கல்ல.
அமெரிக்காவால் ஊக்குவிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட அல் காயிதா பின்னாளில் எப்படி அமெரிக்காவின் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டியெடுத்தது என்பதும் தெரிந்த சரித்திரமே. புதின் இதையெல்லாம் யோசிக்காமல் இருந்திருக்க மாட்டார். ஆனால் செச்னியப் போராளிகள் விஷயத்தில் இது இத்தனை சீக்கிரம் நடக்கும் என்பதையும் அவர் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
இதனிடையே வடக்கு மற்றும் தெற்கு செச்னியப் போராளிகளுக்கு இடையே இருக்கும் சிறு பிணக்குகள் மற்றும் கசமுசாக்களை உடனடியாகத் தீர்த்து வைத்து இருதரப்புப் போராளிகளையும் ஒன்று சேர்த்து ரஷ்யாவுக்கு எதிரான விஸ்தாரமான யுத்தம் தொடங்குவதற்கான ஆயத்தங்களை செச்னியாவில் இருக்கும் ஜிஹாத் குழுத் தலைவர்கள் ஆரம்பித்திருப்பதாகத் தெரிகிறது.
பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடிந்துவிடும் பட்சத்தில் தை பிறக்கும்போது சிரியாவுக்குப் போன சித்தாளுகளும் திரும்பி வந்துவிடுவார்கள். அப்புறமென்ன? மீண்டும் செச்னியா செய்தியில் அடிபடும் நாள் வெகு தொலைவில் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT