Published : 09 Jan 2014 10:26 AM
Last Updated : 09 Jan 2014 10:26 AM
எக்கச்சக்கமாக செலவு செய்து, இல்லாத கூத்தடித்து, இருபத்தியேழு பேரை சாகடித்து, ஊரெல்லாம் கலவரமாக்கி ஒரு எலக்ஷன் வைத்து சர்வாதிகார கவர்மெண்ட் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதென்பது இருபத்தியோறாம் நூற்றாண்டில் சாத்தியமே. ஜனநாயகம் என்று மட்டும் சொல்லிவிட வேண்டும். உள்ளுக்குள்ளே என்ன நடந்தாலும் ஊரார் கேட்கமாட்டார்.
கடந்த ஞாயிறன்று பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் அம்மணி ஷேக் ஹசீனாவுக்கு ஒரு வாழ்த்து சொல்லி வைப்போம். ஏனென்றால் அமெரிக்கா தொடங்கி உலகின் வேறெந்த பெரிய ஜனநாயக தேசமும் ஒப்புக்கொள்ளாத இந்தப் பொதுத் தேர்தலை இந்தியா அங்கீகரித்திருக்கிறது. ஷேக் ஹசீனாவின் அளப்பரிய திறமைமீது நம்பிக்கை காட்டியிருக்கிறது.
தேர்தல் தகிடுதத்தங்கள் எல்லாம் எங்கே இல்லை? இதெல்லாம் ஜனநாயகப் பால்வீதியின் ஓரங்களில் முளைத்திருக்கக்கூடிய சாதா ரக கள்ளிச் செடிகள். கள்ளியிலும் பால் உண்டு. கள்ளிப் பாலுக்கும் பயனுண்டு. எதையாவது யாரையாவது சாகடிக்க வேண்டுமானால் எளிய வழி. முயற்சி செய்யலாமா? பிடி அந்த ஜனநாயகத்தை. முகவாய்க்கட்டையை இழுத்துப் பிடித்து தொண்டையில் ஊற்று நாலு சொட்டு. தீர்ந்தது விஷயம்.
பங்களாதேஷ் பொதுத் தேர்தல் ஒரு வெளிப்படையான கேலிக்கூத்து. பிரதான எதிர்க்கட்சியான பங்களா தேஷ் தேசியவாதக் கட்சி இந்தத் தேர்தலில் பங்குபெறவில்லை. எப்படியானாலும் ஹசீனா அம்மணி தன் நாற்காலியை விட்டுக்கொடுக்காதிருக்க என்னவும் செய்வார் என்று சொல்லியே தேர்தலைப் புறக்கணித்துவிட்டார், ஹசீனாவின் பால்யகால சகியும் பல்போகும் காலத்துச் சத்ருவுமான கலிதா ஜியா.
இதை அவர் 2011லிருந்தே சொல்லி வருவதைக் கவனிக்க வேண்டும். அந்த வருஷம் ஷேக் ஹசீனா ஒரு முக்கியமான சட்டத்தை ரத்து செய்தார். அதாகப்பட்டது, ஒரு பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால், அதுவும் ஊழலின்றி ஒழுங்காக நடக்கவேண்டுமானால் பதவியில் இருக்கும் கட்சி ராஜி நாமா செய்துவிட்டு, இடைக்கால அரசாங்கம் ஒன்றை நியமிக்க வேண்டும். ஒப்புக்காகவேனும் தேர்தல் பாரபட்சமின்றி நடத்தப்படும் என்று அந்த இடையரசு சொல்லும்.
என்னத்துக்கு இந்தக் கண் துடைப்பெல்லாம்? அரசியல் சாசனத்தின் பதினைந்தாவது திருத்தமாக இந்த இடைக்கால அரசு என்னும் ஏற்பாட்டையே ஹசீனா ரத்து செய்துவிட்டதாக அறிவித்தார். யார் கேட்பது? நல்லாட்சி என்பது நான் தருவதுதான். வேறு யார் வந்து இந்த சீட்டில் உட்கார்ந்தாலும் அது பேயாட்சி. பிசாசு ராஜ்ஜியம்.
நடந்து முடிந்த இந்த நாடாளுமன்றத் தேர்தல் பங்களாதேஷில் வன்முறையின் புதிய பரிமாணங்களை வாக்காளப் பெருமக்களுக்கு அடையாளம் காட்டியதை மறுக்க இயலாது. மொத்த வாக்காளர்களில் 40% பேர்கூட வோட்டுப் போட வரவில்லை. பெரும்பாலான தொகுதி களில் எதிர் வேட்பாளர்களே கிடையாது. எனவே ஆளுங்கட்சியின் மகத்தான வெற்றிக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை.
உலகம் முழுதும் கைகொட்டிச் சிரித்த கேலிக்கூத்தாக இந்தத் தேர்தல் நடந்து முடிந்ததை ஒரு சரித்திர அவமானமாக பங்களாதேஷ் மக்கள் கருதுகிறார்கள். உடனடியாக நாடு தழுவிய வேலை நிறுத்தம், போராட்டம், அறைகூவல் என்று காலிதா ஜியா வரிந்துகட்ட ஆரம்பித்து விட்டார். அவரும் ஒன்றும் லேசுப்பட்டவர் இல்லை. அவராண்ட காலத்திலும் அவலங்களுக்குக் குறைச்சலில்லை. இப்போது அவர் செய்யும் வேலைகளை அப்போது இவர் செய்து கொண்டிருந்தார். அதுதான் வித்தியாசம்.
எப்படிப் பார்த்தாலும் இந்த இரண்டு பெண்மணிகளிடம் சிக்கி பங்களாதேஷ் சின்னாபின்னமாகிக்கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT