Last Updated : 12 Oct, 2014 01:53 PM

 

Published : 12 Oct 2014 01:53 PM
Last Updated : 12 Oct 2014 01:53 PM

கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு ஐ.நா. சபை, ஒபாமா பாராட்டு

அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு ஐ.நா. சபை, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் பான் கி-மூன் கூறியபோது, குழந்தைகள் உரிமைக்காக ஓய்வின்றி போராடிய கைலாஷுக்கும் மலாலாவுக்கும் நோபல் பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் குழந்தைகளைக் காக்கும் பாதுகாவலர்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் செயித் அல் ஹுசைன் கூறியபோது, மனித உரிமைக்காகவும் குழந்தைகள் உரிமைக்காகவும் முன்களத்தில் நின்று போராடும் இருவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமாக உள்ளது, உரிமைக்காகப் போராடும்போது அவர்கள் காட்டும் வீரம், தியாகம் பிரமிக்கவைக்கிறது என்றார்.

யுனிசெப் பொது இயக்குநர் இரினா போகோவா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா. சபையின் நெருங்கிய நண்பர் கைலாஷ் சத்யார்த்தி, குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க 1980 முதல் ஐ.நா.வுடன் அவர் இணைந்து பணியாற்றி வருகிறார், அதேபோல் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா சர்வதேச அளவில் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்து வருகிறார், இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அதிபர் ஒபாமா புகழாரம்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியிருப்பதாவது:

கைலாஷ், மலாலாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நோபல் பரிசு உரிமைக்காகப் போராடும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கிடைத்த வெற்றி. பாகிஸ்தானில் பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடிய மலாலாவை தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யமுயன்றனர். ஆனால் அவர் தனது துணிவால் மீண்டெழுந்து குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் போராடி வருகிறார். கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையில் மலாலாவுக்கு நான் அளித்தவிருந்தை இப்போது நினைவுகூருகிறேன்.

இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார். சமூகத்தில் பின்தங்கிய மக்களை, குழந்தைகளை நாம் கைதூக்கிவிட வேண்டும் என்பதற்கு வாழும் உதாரணமாக கைலாஷ் திகழ்கிறார். மலாலா, கைலாஷ் இருவரும் வெவ்வேறு நாடுகள், கலாச்சாரம், மதங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் நீதிக்காக, குழந்தைகளின் உரிமைக்காகப் போராடும் உத்தமர்கள். இருவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பதை மனித குலம் கொண்டாட வேண்டும் என ஒபாமா புகழாரம் சூட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x