Last Updated : 24 Sep, 2015 05:14 PM

 

Published : 24 Sep 2015 05:14 PM
Last Updated : 24 Sep 2015 05:14 PM

ஹஜ் யாத்திரையில் இதுவரையிலான 7 பெருந்துயர நிகழ்வுகள்

ஹஜ் யாத்திரைக்காக 20 லட்சம் பேர் கூடுவதால் ஏற்படும் நெரிசலில் சிக்கி சவுதி அரேபியாவில் 453 பேர் பலியாகினர். 450-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் சவுதி அரேபிய அரசுக்கு இந்த பெருமளவு கூட்டத்தை நிர்வகிப்பதில் கடும் சவால்கள் ஏற்பட்டு வருகின்றன.

ஆண்டுதோறும் ஹஜ் யாத்திரை தொடர்பான விபத்துகள், துயர சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மெக்கா, மெதீனா புனித ஸ்தலம் ஒவ்வொரு ஆண்டும் துயர சம்பவங்கள் நிகழும் இடமாக மாறி வருவது குறித்து சவுதி அரேபிய அரசு கவலையடைந்துள்ளது.

துயரங்களைத் தடுக்க பல்வேறு விதமான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் ஹஜ் யாத்திரை தொடர்பான துயர சம்பவங்களைத் திரும்பிப் பார்க்கிறோம்:

1990: ஹஜ் யாத்திரையின் மிக மோசமான துயரச் சம்பவம் என்று வர்ணிக்கப்படும் இந்தச் சம்பவத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 1,426 பேர் பலியாகினர். மெக்காவில் உள்ள புனிதத் தலத்துக்கு செல்லும் நடைவாசிகளுக்குரிய சுரங்கப்பாதையில் நெரிசல் ஏற்பட்டு 1426 பேர் பலியாக, ஏராளமானோர் காயமடைந்தனர்.

1994: மினாவில், கல்லெறியும் சடங்குக்காக கூட்டம் சேர்ந்த போது ஏற்பட்ட நெரிசலில் 270 பேர் உயிரிழந்தனர்.

1997: மினாவில் ஹஜ் யாத்திரீகர்களுக்காக அமைக்கப்பட்ட முகாம்களில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 340 யாத்ரீகர்கள் பலியாகினர். கடும் காற்றினால் தீ பரவியதில் மேலும் 1,500 பேர் காயமடைந்தனர்.

1998: மினாவில் அதே புனிதச் சடங்கு தருணத்தில் மேம்பாலம் ஒன்றின் மீது சென்று கொண்டிருந்த போது பதட்டத்திலும் நெரிசலிலும் சிக்கி மேம்பாலத்திலிருந்து விழுந்து சுமார் 180 பேர் பலியாகினர்.

2004: மினாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் பல யாத்திரிகர்கள் சிக்கினர். இதில் கடைசி நாளில் 244 பேர் பலியாகி, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

2006: மினாவின் பாலைவனச் சமவெளியில் நெரிசலில் சிக்கி 360 பேர் பலியாகினர். இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை தொடங்குவதற்கு முதல் நாள் மெக்காவில் உள்ள 8 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் குறைந்தது 73 பேர் பலியாகினர்.

2015: கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 453 பேர் பலியாகியுள்ளதோடு, 450 பேர் காயமடைந்துள்ளனர். ஹஜ் யாத்திரை தொடங்கும் முன்னதாக ராட்சத கிரேன் ஒன்று உடைந்து விழுந்ததில் 111 பேர் பலியாகி, பலர் காயமடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x