Published : 23 Feb 2017 01:56 PM
Last Updated : 23 Feb 2017 01:56 PM
அமெரிக்க பள்ளிகளில் திருநங்கை மாணவர்கள் பாலின விருப்பப்படி கழிப்பறைகளை உபயோகிக்கலாம் என்ற முந்தைய ஒபாமா அரசின் உத்தரவை ட்ரம்ப் அரசு ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரம்ப்பின் இந்த புதிய உத்தரவு அமெரிக்க திருநங்கை சமுதாயத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் ஒபாமா தலைமையிலான அரசு, அமெரிக்க பள்ளிகளில் திருநங்கை மாணவர்கள் தங்களது பாலின விருப்பத்துக்கேற்ப கழிப்பறைகளை உபயோகிக்க அனுமதிக்குமாறு பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திருநங்கை மாணவர்களுக்காக ஒபாமா அரசு அறிவுறுத்திய இந்தத் திட்டத்தை புதன்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க பள்ளிகளுக்கு, "ஒபாமாவின் உத்தரவு குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், தேவையற்ற ஒன்றாகவும் உள்ளது" என்று அமெரிக்க நீதித்துறை, பள்ளித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து திருநங்கை மாணவர்கள் வெள்ளை மாளிகை முன்பு கூடி "வெறுப்பு இல்லை, பயம் இல்லை, திருநங்கை மாணவர்கள் இங்கு வரவேற்கப்படுகிறார்கள்" என்று ட்ரம்ப்புக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்றதிலிருந்து ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
மெக்ஸிகோ எல்லையில் சுவர், குடியுரிமை கொள்கையில் மாற்றம், 7 முஸ்லிம் நாடுகளின் மீதான தடை போன்ற ட்ரம்ப்பின் நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் மத்தியில் எதிர்ப்புகள் எழுந்திருக்கும் நிலையில் திருநங்கை மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ட்ரம்ப் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT