Published : 25 Oct 2014 08:35 AM
Last Updated : 25 Oct 2014 08:35 AM
இராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ். தீவிரவாத படையினர் குர்து படையின் வீராங்கனைகளை கண்டு அஞ்சி ஓடுகின்றனர்.
இராக், சிரியாவில் தற்போது ஷியா முஸ்லிம் தலைவர்கள் ஆட்சி நடத்தி வருகின்றனர். இதை எதிர்த்து சன்னி பிரிவைச் சேர்ந்த இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) கிளர்ச்சிப் படை உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகிறது. இரு நாடுகளிலும் பெரும் பகுதி ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ளது.
ஷியா முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள், குர்து சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து ஐ.எஸ். படை தாக்குதல் நடத்தி வருகிறது.
தற்போது அமெரிக்க உதவியுடன் குர்து படை வீரர்கள் ஐ.எஸ். படைக்கு எதிராக தீரமாகப் போரிட்டு வருகின்றனர். அண்மைக்காலமாக குர்து படைப் பிரிவில் பெண்கள் அதிகம் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
பெண்களின் கையால் உயிரிழந்தால் சொர்க்கத்துக்கு செல்ல முடியாது என்பது ஐ.எஸ். படையினரின் நம்பிக்கை. அதனால் வீராங்கனைகளைப் பார்த்தால் கிளர்ச்சிப் படையினர் நேருக்கு நேர் சண்டையிடாமல் ஓடி விடுகின்றனர். இதையடுத்து குர்து படையில் வீராங்கனை களுக்கு அதிக முக்கியத் துவம் அளிக்கப்பட்டு வரு கிறது.
குர்து பெண்கள் படைப் பிரிவுக்கு நாரின் அப்ரின் என்பவர் தலைமையேற்று வழிநடத்துகிறார். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ். படையினரை கொன்று குவித்துள்ள அவருக்கு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அவரைப் போன்று ரெஹைனா என்ற குர்து பெண் போராளியும் நூற்றுக்கும் மேற்பட்டோரை சுட்டு வீழ்த்தியுள்ளார். அவர் கூறியபோது, எனது மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக திருமணம் செய்து கொள்ளாமல் படையில் சேர்ந்து போரிட்டு வருகிறேன். எனது தியாகத்தின் மூலம் எங்கள் இனத்தின் எதிர்கால சந்ததியினர் சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும். ஐ.எஸ். படை வீரர்களை நான் மனிதர்களாவே மதிக்கவில்லை, அவர்கள் காட்டுமிராண்டிகள் என்று தெரிவித் தார்.
ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தும் ஐ.எஸ்.
இராக், சிரியாவில் ஐ.எஸ். படைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் களமிறங்கியிருப்பதால் அவர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஐ.எஸ். வீரர்கள் போர்க்களத்தில் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் பாக்தாத்தில் இருந்து 50 கி.மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தின் மீது ஐ.எஸ். படை வீரர்கள் ரசாயன குண்டுகளை வீசியுள்ளனர். இதனை இராக் போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT