Last Updated : 29 Oct, 2014 01:02 PM

 

Published : 29 Oct 2014 01:02 PM
Last Updated : 29 Oct 2014 01:02 PM

விண்வெளிக்கு உபகரணம் கொண்டு சென்ற நாசா ராக்கெட் ஏவு தளத்திலேயே வெடித்துச் சிதறியது

விண்வெளி நிலையத்துக்கு உபகரணங்களை எடுத்துச் சென்ற நாசாவின் ஆளில்லா ராக்கெட், ஏவிய 6 நொடிகளில் ஏவு தளத்திலேயே வெடித்து சிதறியது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் ஆளில்லா ராக்கெட் விண்வெளி நிலையத்துக்கு செவ்வாய்கிழமை மாலை ஏவப்பட்டது. வர்ஜீனியா ஏவுகணை ஆய்வு தளத்திலிருந்து ராக்கெட் ஏவப்பட்ட 6 நொடிகளில் இந்த ஆளில்லா ராக்கெட் விமானம் வெடித்து சிதறியது. 5000 பவுண்ட் எடை கொண்ட ராக்கெட் தரையிலிருந்து சற்று உயரத்தில் சீறிப் பாய முற்பட்டபோது வெடித்தது.

இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தை ஆய்வு மையத்திலிருந்த 2 அமெரிக்கர்கள், 3 ரஷ்யர்கள் மற்றும் ஒரு ஜெர்மனியர் கொண்ட குழு உறுதி செய்தது.

விமானம் ஏவுவதற்கு முன்னர் நடத்தப்பட்ட ஆய்வில் தொழில்நுட்ப கோளாறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று அந்த மையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராக்கெட் வெடித்து கீழே முழு வேகத்தில் வீழ்ந்ததில் ஏவு தளத்துக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. நாசா தனது விண்வெளி ஆராய்ச்சிக்கான உபகரணங்களை விண்வெளிக்கு எடுத்து செல்லும் பொறுப்பை தனியார் வசம் சமீபத்தில் ஒப்படைத்தது. இந்த நிலையில் முதல் முறையாக நாசாவின் ராக்கெட் வெடித்து சிதறியது சற்று பின்னடைவாக கருதப்படுகிறது. இதனால் தனியார் ஆய்வு நிறுவனமான ஆர்பிடல் சைன்சஸ் கழகம் மிகுந்த விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளது.

ராக்கெட் ஏவுகணை தோல்வியில் முடிந்ததற்கான காரணம் மற்றும் ஏற்பட்ட கோளாறு குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x