Published : 20 Jul 2016 01:16 PM
Last Updated : 20 Jul 2016 01:16 PM
குடியரசு கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளராக டொனல்டு டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஆளும் ஜனநாயக கட்சி, குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்ய உட்கட்சி தேர்தல் நடந்தது. இதில் குடியரசு கட்சியில் தொழிலதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பெற்றார்.
இதைத் தொடர்ந்து, அந்தக் கட்சியின் அதிபர் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கான 4 நாள் மாநாடு ஒஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் தொடங்கியது.
உட்கட்சித் தேர்தலில் ட்ரம்ப் அதிக வாக்குகள் பெற்றாலும் கட்சி மாநாட்டில் மூத்த தலைவர்கள் அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து அதிபர் வேட்பாளரை மாற்ற முடியும். அதன்படி ட்ரம்பின் எதிர்ப்பாளர்கள் நேற்று அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர முயன்றனர். ஆனால் அதற்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், தங்கள் கட்சிப் பிரதிநிதிகளின் அதிக வாக்குகளைப் பெற்ற டொனால்டு டிரம்ப்பை அதிபர் வேட்பாளராக குடியரசுக் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கான அறிவிப்பை அவரது மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்ட டொனால்டு டிரம்ப், "குடியரசு கட்சியின் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளராக என்னை அறிவித்ததில் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன். அமெரிக்காவின் முன்னேற்றத்துக்கு கடுமையாக உழைப்பேன்" என்று மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளருக்கான உட்கட்சி தேர்தல் களத்தில் 16 மூத்த தலைவர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரையும்விட டிரம்ப் அதிக வாக்குகளைப் பெற்று அதிபர் வேட்பாளராகி இருக்கிறார்.
சர்ச்சையின் நாயகன்...
10 மாதங்களுக்கு முன்பாக அரசியல் முகம் காட்டத் தொடங்கிய டோனாட்டு டிரம்ப் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க தேசியவாதத்தை பல்வேறு சர்ச்சைக்குரிய விதங்களில் இவர் பிரதிநிதித்துவம் செய்து வருகிறார். அமெரிக்க ஜனநாயகம் போற்றும் பல மதிப்பு மிக்க நடைமுறைகளை இவர் கடுமையாகக் கேள்விக்குட்படுத்தி வந்ததுடன், அமெரிக்க இளைஞர்களின் அதிருப்தியில் குளிர்காயும் நோக்கங்களுடன் கடுமையான் சர்ச்சைகளுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருந்தார். கடந்த இரு மாதங்களாக அமெரிக்கா முழுவதும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்தப் பிரச்சாரத்தின்போது டொனால்டு டிரம்ப் கூறிய சர்ச்சையான கருத்துகளால் உலக நாடுகளின் சில தலைவர்களிடம் அவர் மீது கடும் அதிருப்தி கிளம்பியது. குறிப்பாக, இஸ்லாமியர்களுக்கு எதிரான டொனால்ட் டிரம்பின் கருத்துகள் பெரும் சர்ச்சைக்குள்ளாகின.
பிரிவினைவாத சிந்தனை கொண்ட டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் பேராபத்து ஏற்படும் என்று அமெரிக்க தொழில்நுட்ப நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
அதேவேளையில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன், டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் ஜனநாயகத்துக்கே பெரும் அச்சுறுத்தல் என்று குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, நேற்று முதல்நாள் மாநாட்டில் 58 பக்க தேர்தல் அறிக்கையை ட்ரம்ப் வெளியிட்டார். அதில் இந்தியா பற்றி குறிப்பிடும்போது, 'புவியியல், அரசியல் ரீதியாக இந்தியாவும் அமெரிக்காவும் மிக நெருங்கிய நட்பு நாடுகளாக விளங்குகின்றன. நான் அதிபராக பதவியேற்றால் இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்துவேன்' என்று ட்ரம்ப் தெரிவித்ததும் கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT