Last Updated : 25 Oct, 2014 11:46 AM

 

Published : 25 Oct 2014 11:46 AM
Last Updated : 25 Oct 2014 11:46 AM

எபோலாவை விரைவாக கட்டுப்படுத்தாவிட்டால் டிசம்பரில் பேராபத்தை ஏற்படுத்தும்: ஆய்வு முடிவில் எச்சரிக்கை

எபோலா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் டிசம்பர் மாத வாக்கில் அது பேராபத்தை ஏற்படுத்தும் என ஒரு ஆய்வு முடிவு எச்சரிக்கிறது.

தி லான்செட் தொற்று நோய்கள் இதழில் வெளியாகி உள்ள இந்த ஆய்வின் விவரம்:

யேல் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரம், மருத்துவக் கல்வி மையம், லைபீரியாவின் சுகாதார மற்றும் சமூகநல அமைச்சகம் ஆகியவற்றின் 7 விஞ்ஞானிகள் கூட்டாக சேர்ந்து எபோலா வைரஸ் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர்.

இந்த வைரஸ் பரவும் வேகம் இப்போது உள்ள நிலையிலேயே நீடித்தால், வரும் டிசம்பர் 15-ம் தேதி வாக்கில் பல்லாயிரக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்படுவதுடன், பலியாவோர் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரிக்கும்.

குறிப்பாக, இந்த வைரஸால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள லைபீரியாவின் மான்ட்செராடோ நகரில் மட்டும் 1.7 லட்சம் பேருக்கு இந்த வைரல் பரவும். இது அந்த நகரின் மொத்த மக்கள் தொகையான 13.8 லட்சத்தில் 12 சதவீதம் ஆகும். 90,122 பேர் பலியாவார்கள்.

ஆனால் சர்வதேச நாடுகள் இணைந்து, வரும் 31-ம் தேதி முதல் எபோலா தடுப்பு நடவடிக்கையை விரைவுபடுத்தினால், மான்ட்செராடோ நகரில் மட்டும் 97,940 பேருக்கு எபோலா பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும்.

அதாவது எபோலா சிகிச்சை மையங்களின் எண்ணிக்கையை இப்போது இருப்பதைப் போல 5 மடங்காக உடனடியாக அதிகரிக்க வேண்டும். ஏற்கெனவே எபோலாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு சாதனங்களை வழங்க வேண்டும்.

இதுகுறித்து இந்த ஆய்வில் பங்கேற்ற மூத்த அதிகாரியும் தொற்று நோய் இயல் பேராசிரியருமான அலிசன் கால்வனி கூறும்போது, “எபோலா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுத்தால்தான் மற்றவர்களுக்கு பரவுவதையும், பலி எண்ணிக்கையையும் கட்டுப்படுத்த முடியும்” என்றார்.

கினியாவில் உள்ள ஒரு குழந்தைக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் எபோலா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் இது வேகமாக பரவி வருகிறது. லைபீரியா, சீரா லியோன், கினியா ஆகிய நாடுகளில் இதுவரை 9 ஆயிரம் பேருக்கு எபோலா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சுமார் 4,500 பேர் உயிரிழந்துள்ளனர்.

நியூ யார்க் மருத்துவருக்கு எபோலா

கினியாவில் எபோலா நோயாளிக்கு சிகிச்சை அளித்துவிட்டு கடந்த வாரம் தாய்நாட்டுக்கு (அமெரிக்கா) திரும்பிய மருத்துவர் கிரெய்க் ஸ்பென்சருக்கு (33) எபோலா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இவர் நியூ யார்க் நகரில் உள்ள பெல்லவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நகரில் மொத்தம் 8 அரசு மருத்துவமனைகளில் எபோலா சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x