Last Updated : 29 Oct, 2014 11:11 AM

 

Published : 29 Oct 2014 11:11 AM
Last Updated : 29 Oct 2014 11:11 AM

இந்தியா வருகிறது சூரிய சக்தி விமானம்: ஆமதாபாத், வாரணாசியில் தரையிறக்க முடிவு

இரவிலும் பகலிலும் பறக்கும் திறன் கொண்ட உலகின் முதல் சூரிய சக்தி விமானம் ‘சோலார் இம்பல்ஸ்’ வரும் மார்ச் மாதம் இந்தியா வரவுள்ளது. அப்போது, ஆமதாபாத் மற்றும் வாரணாசியில் தரையிறக்க இந்தியாவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என சோலார் இம்பல்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆந்ரே போர்ஸ்ச்பெர்க் மற்றும் பெர்ட்ரான்ட் பிக்கர்டு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோலார் இம்பல்ஸ் நிறுவனம் தயாரித்த, முழுக்க முழுக்க சூரிய சக்தியால் மட்டுமே இயங்கும் விமானத்துக்கு ‘சோலார் இம்பல்ஸ்’ என்றே பெயரிடப்பட்டுள்ளது. சுமார் 12 ஆயிரம் சோலார் பேனல்கள் மூலம் இவ்விமானம் பறப்பதற்கான எரிசக்தி பெறப்படுகிறது. முந்தைய சோலார் கண்டுபிடிப்புகளால் இரவில் பறப்பது சிரமம். அந்தத் தடையையும் தகர்த்து இரவிலும் பறக்கும் திறனை ‘சோலார் இம்பல்ஸ்’ பெற்றிருக்கிறது.

வரும் 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் அபுதாபியில் தன் பயணத்தைத் தொடங்கும் ‘சோலார் இம்பல்ஸ்’, முதல் நாடாக இந்தியாவுக்குப் பயணிக்கிறது. இந்தியாவில், ஆமதாபாத், வாரணாசி ஆகிய இரு இடங்களில் ‘சோலார் இம்பல்ஸ்’ தரையிறங்க அனுமதி கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக சோலார் இம்பல்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆந்ரே போர்ஸ்ச்பெர்க் மற்றும் பெர்ட்ரான்ட் பிக்கர்டு ஆகியோர் இந்திய செய்தியாளர்களிடம் ஸ்விட்சர்லாந்தில் கூறியதாவது:

ஆமதாபாத், வாரணாசி ஆகிய இரு நகரங்களில் தரையிறக்க இந்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம். இந்தியா தவிர, சீனாவிலும் தரையிறக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆலோசித்து வருகிறோம். ஒற்றை விமானியால் இயக்கப் படவுள்ள இந்த விமானம், அபுதாயிலிருந்து மார்ச் மாதம் தொடங்கும். இந்தியாவில் முதலில் தரையிறங்கி தூரகிழக்கு நாடுகளுக்கும், பசிபிக் கடல் பகுதியிலும் பறந்த பின், அமெரிக்காவுக்கு பயணிக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

12 ஆயிரம் தகடுகள்

புதிய தொழில்நுட்பத்தை உலகத்துக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இப்பயணம் அமையும். விமானத்தின் எடை 2,740 கிலோ. மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறனுடையது.

135 மைக்ரான் தடிமன் (மனித மயிரிழையின் தடிமன்) கொண்ட 12 ஆயிரம் சூரியசக்தித் தகடுகள் இவ்விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளன. 144 பக்கவரிசைகளில் 50 செ.மீ. இடைவெளியில் நேர்த்தியாக இத்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. விமானத்தின் மேற்புறம் சூரியசக்தித் தகடுகளாலும், அடிப்பாகம் மிக இலகுவான செயற்கை இழையாலும் (அல்ட்ரா லைட் பேப்ரிக்) வடிவமைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் இறகுப் பகுதி முழுக்க கார்பன் பைபர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது

பகலில் சூரிய சக்தி மூலம் பறந்தபடி, உபரி மின்சாரம் பேட்டரிகளில் சேமிக்கப்படும். அந்த பேட்டரி மூலம் இரவில் தொடர்ந்து பறக்கும். இவ்விமானத்தின் எடையில் மூன்றில் இரண்டு பங்கு பேட்டரிகளாகும். ‘சோலார் இம்பல்ஸை’ தொடர்ந்து 120 மணி நேரம் இயக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x