Last Updated : 23 Oct, 2014 12:04 PM

 

Published : 23 Oct 2014 12:04 PM
Last Updated : 23 Oct 2014 12:04 PM

கனடா நாடாளுமன்றத் தாக்குதல்: ஹார்பருடன் ஒபாமா பேச்சு

கனடா நாடாளுமன்றத் தாக்குதல் பயங்கரவாதிகளின் முட்டாள்தனமான செயல் என்றும், இதுபோன்ற சம்பவங்களை விழிப்புடன் கையாள வேண்டிய சூழல் நிலவுகிறது என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

கனடா நாடாளுமன்ற வளாகத் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒபாமா பேசினார்.

அப்போது அவர், "சர்வதேச நாடுகளை குறிவைத்து நடத்தப்படும் இதுபோன்ற கோழைத்தனமான தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது. தாக்குதல் யாரால், எந்த நோக்கத்தால் நடத்தப்பட்டது என்பது இன்னும் உறுதியாகாமல் உள்ளது.

பயங்கரவாதிகள் இது போன்ற தாக்குதல்களுக்கு எத்தகைய காரணங்களை சுட்டிக் காட்டினாலும், அவை முட்டாள்தனமான செயல் தான். இதுபோன்ற செயல்களை நாம் விழிப்புடன் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். கனடா நாட்டுக்கு தேவையான அனைத்து உதவியையும் அமெரிக்க செய்ய தயாராக உள்ளது" என்றார் ஒபாமா.

இதனிடையே, துப்பாக்கிச்சூடு சம்பவத்தால், கனடாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் கனடா காவல் துறை, மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

தாக்குதல் சம்பவத்தில் பலர் ஈடுபட்டிருக்கலாம் என்றும், யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் அந்நாட்டு போலீஸ் கூறியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிக்கும் நபர் என கருதப்படுபவர், கனடா போலீஸார் ஒருவர் மீது காரை ஏற்றிக் கொன்றார். இதையடுத்து, அந்த நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

இந்தச் சூழலில், நாடாளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றிருப்பதால், இது ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சதியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x