Published : 24 Oct 2014 12:10 PM
Last Updated : 24 Oct 2014 12:10 PM
மேற்கு ஆப்பிரிக்காவில் பணியாற்றிய நியூயார்க்கை சேர்ந்த மருத்துவருக்கு எபோலா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவிலிருந்து நியூயார்க் வந்த அமெரிக்க மருத்துவருக்கு எபோலா பாதிப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த மருத்துவர் கிரெய்க் ஸ்பென்சர் (33) என்பவருக்கு கடுமையான காய்ச்சலால் இருந்தது தெரியவந்தது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதித்து பார்த்ததில் அவருக்கு எபோலா வைரஸ் பாதிப்பு இருப்பது அறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து கிரெய்க் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 14-ம் தேதி கினியாவிலிருந்து அமெரிக்கா திரும்பிய கிரெய்க்குடன் கடந்த சில நாட்கள் பணியாற்றியவர்கள், பழகியவர்களின் பட்டியலை கொண்டு அவர்களுக்கு எபோலா வைரஸ் தாக்குதல் குறித்து பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, நைஜீரியா, கினியா, உள்ளிட்ட 6 நாடுகளில் எபோலா நோய் வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5000-த்தை எட்டியுள்ளது. மேலும் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அது மட்டும் இல்லாமல் இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை
அளித்து வந்த மருத்துவர்கள், எல்லையில்லா ஐ.நா. சுகாதார குழு அதிகாரிகள், செவிலியர்கள் என பலரை பாதித்துள்ளது அனைவரையும் அச்சமடைய செய்துள்ளது.
இது போல அமெரிக்காவில் 9 பேருக்கு எபோலா உள்ளது உறுதியாகி உள்ளது. முன்னதாக டலாஸில் எபோலாவால் பாதிக்கப்பட்ட லைபீரியரும் அமெரிக்காவில் எபோலா பாதிப்புடன் கண்டுபிடிக்கப்பட்ட முதல் நபர் கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT