Last Updated : 14 Apr, 2017 03:04 PM

 

Published : 14 Apr 2017 03:04 PM
Last Updated : 14 Apr 2017 03:04 PM

ஆப்கனில் ஐ.எஸ். முகாம் மீது அமெரிக்கா ராட்சத குண்டு வீச்சு

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்க ராணுவத்தின் மிகப் பெரிய குண்டு வீசப்பட்டதில் 36 பேர் உயிரிழந்ததாக ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிழக்கு ஆப்கானிஸ்தான், நங்கர் கார் மாகாணத்தில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அச்சின் மாவட்டம் உள்ளது. இங்கு ஐ.எஸ். தீவிரவாதி களை குறிவைத்து ‘அனைத்து வெடிகுண்டுகளின் தாய்’ என்று கூறப்படும் மிகப்பெரிய குண்டை அமெரிக்க விமானம் நேற்று முன் தினம் வீசியது. இதில் ஐ.எஸ். தீவிர வாதிகளின் பதுங்குமிடம் மற்றும் சுரங்க வளாகம் அழிக்கப்பட்ட தாகவும் 36 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, இத்தாக்குதல் மிக மிக வெற்றிகரமாக அமைந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறினார். பொது மக்கள் உயிரிழப்பை தடுக்க அனைத்து முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக ஆப்கன் அதிபர் மாளிகை தெரிவித்தது.

வெடிகுண்டுகளின் தாய்

ஐஎஸ் தீவிரவாதிகளை குறி வைத்து அமெரிக்கா நேற்று வீசிய ஜிபியு-43/பி என்ற வெடிகுண்டு ‘அனைத்து வெடிகுண்டுகளின் தாய் (எம்ஓஏபி)’ என்று அழைக்கப் படுகிறது. மலைக்குகைகள், சுரங் கங்கள் மற்றும் பரந்த நிலப் பகுதியை அழிப்பதற்காக இது உரு வாக்கப்பட்டது. 9 மீட்டர் நீளமும் 1 மீட்டர் விட்டமும் 9,800 கிலோ எடையும் கொண்ட இந்த வெடி குண்டு ஜிபிஎஸ் கருவி வழிகாட்டு தலுடன் சென்று இலக்கை தாக்க வல்லது. 11 டன் வெடிபொருள் ஏற் படுத்தும் நாசத்துக்கு இணையான அழிவை ஏற்படுத்தக் கூடியது. அமெரிக்க ராணுவத்தின் அணு ஆயுதம் அல்லாத வெடிகுண்டில் இதுவே மிகப் பெரியதாகும்.

ஈராக் போரில் பயன்படுத்து வதற்காக சுமார் ரூ.103 கோடி செல வில் இந்த வெடிகுண்டு உருவாக்கப் பட்டது. 2003-ல் இது சோதித்துப் பார்க்கப்பட்டது. என்றாலும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட வில்லை. இந்நிலையில் அமெரிக்க ராணுவத்தில் சேர்க்கப்பட்டு, நேற்று முன்தினம் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அணு ஆயுதம் அல்லாத வெடிகுண்டு என்பதால் இதை பயன்படுத்த அமெரிக்க அதிபரின் ஒப்புதல் தேவையில்லை.

உலகின் மிகப்பெரிய குண்டுகள்

அமெரிக்காவின் ஜிபியு-43பி வெடிகுண்டுக்கு போட்டியாக அடுத்த 4 ஆண்டுகளில் ‘அனைத்து வெடிகுண்டுகளின் தந்தை (எப்ஓஏபி)’ என்ற பெயரில் மிகப் பெரிய வெடிகுண்டை ரஷ்யா 2007-ல் சோதித்துப் பார்த்தது. அணு ஆயுதம் அல்லாத வெடிகுண்டில் இதுவே அதிக சக்திவாய்ந்த வெடிகுண்டாக கருதப்படுகிறது. அமெரிக்க வெடிகுண்டை விட எடையில் குறைந்தது என்றாலும் 4 மடங்கு அதிக அழிவை ஏற்படுத்தக்கூடியது.

அமெரிக்கா நேற்று முன்தினம் பயன்படுத்திய ஜிபியு-43பி வெடிகுண்டு அளவில் பெரியதாக இருந்தாலும் அதைவிட அதிக எடையில் ஜிபியு-57ஏ என்ற வெடிகுண்டு அந்நாட்டிடம் உள்ளது. இதுவே உலகில் அதிக எடை கொண்ட வெடிகுண்டாக கருதப்படுகிறது. இதுவும் குகைகள், சுரங்கங்களை தகர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது. என்றாலும் அமெரிக்காவின் ஜிபியு-43பி வெடிகுண்டுக்கு இணையான சக்தி இதற்கு இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x