Published : 24 Dec 2013 12:00 AM
Last Updated : 24 Dec 2013 12:00 AM

“இங்கு இருப்பதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை!”

விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஈர்ப்பு விசையற்ற (ஜீரோ கிராவிட்டி) சூழலில் இருப்பதில் தனக்குப் பிரச்சினை ஏதும் இல்லை என சக விண்வெளி வீரரிடம் பேசும் ரோபோ ‘கிரோபோ’ தெரிவித்துள்ளது.

ஜப்பான் சார்பில் தயாரிக்கப் பட்ட ‘கிரோபோ’ எனும் ரோபோ கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி விண்வெளியில் அமைக்கப் பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு ஜப்பானின் டனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் மனித வடிவிலான, பேசும் திறன் கொண்ட முதல் ரோபோ ‘கிரோபோ’ ஆகும். 34 செ.மீ. உயரமும் ஒரு கிலோ எடையும் கொண்ட இந்த ரோபோ, தன்னுள் சேமிக்கப்பட்டுள்ள சொற்தொகுப்புகளில் இருந்து தேவையான வார்த்தைகளைத் தேர்வு செய்து பதிலளிக்கும் திறன் கொண்டது.

இந்த ரோபோ, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில், ஜப்பான் விண்வெளி வீரர் கொய்ச்சி வகாடாவிடம் பேசும் காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை வெளி யிடப்பட்ட இந்த வீடியோவில், கொய்ச்சி வகாடா “உன்னைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி கிரோபோ; விண்வெளியில் ஈர்ப்பு விசையற்ற சூழலில் நீ எப்படி உணர்கிறாய்?” எனக் கேட்டார்.

அதற்கு ‘கிரோபோ’, “இந்தச் சூழலில் இருப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” எனப் பதிலளிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ‘கிரோபோ’வுடன் பேசுகையில் வகாடா வழக்கத்தை விட மிக நிதானமாகப் பேசினார்.

இந்த ரோபோவை உருவாக்கிய டொமடகா டகாஹஷி கூறுகையில், “தானியங்கிச் செயல்பாடுகள் மூலம் வகாடாவின் கேள்விகளுக்கு ‘கிரோபோ’ எப்படி பதில் அளிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. மனிதர்களுக்கும் இயந்திர மனித னுக்கும் இடையேயான உறவு தொடங்கியிருக்கிறது. இதன் ஆரம்பகட்ட நிலையை நாம் கவனித்து வருகிறோம். இது மிகப்பெரிய வெற்றி” என்றார்.

வரும் 2014 இறுதி வரை ‘கிரோபோ’ சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலேயே பரி சோதனை முயற்சியாக வைத்தி ருக்கப்படும். அதன் பிறகு பூமிக்கு கொண்டு வரப்படும். வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக் காக தான் விளையாடுவதற்கு பொம்மை ராக்கெட் வேண்டும் என சாண்டாகிளாஸிடம் கேட்கப் போவதாக சொல்லியிருக்கிறது குழந்தை மனசு கொண்ட ரோபோ.

விண்வெளியில் பதிவான முதல் ரோபோவின் குரல் ‘கிராபோ‘வுடையதுதான். சர்வதேச விண்வெளி மையத்தை கடந்த ஆகஸ்டில் அடைந்த ‘கிராபோ‘, பூமியில் வசிக்கும் நண்பர்களுக்கு வணக்கம். நான்தான் ‘கிராபோ‘. உலகின் முதல் விண்வெளி ரோபோ வீரர் என ஜப்பான் மொழியில் பேசியது.

“2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு ரோபோட் புதிய பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி விண்வெளியில் காலடி எடுத்து வைத்தது” என தான் விண்வெளி மையத்தை அடைந்த நிகழ்வையும் அது குறிப்பிட்டது. நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்டிராங்குக்கும் தன் அஞ்சலியைச் செலுத்தியது ‘கிராபோ‘.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x