Published : 11 Sep 2016 11:06 AM
Last Updated : 11 Sep 2016 11:06 AM
இராக் தலைநகர் பாக்தாத்தில் வணிக வளாகத்தை குறிவைத்து அடுத்தடுத்து நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
பாக்தாத்தின் மத்திய பகுதியில் உள்ள பாலஸ்தீன தெருவில் நக்ஹில் மால் என்ற பிரபல வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இதன் வாகன நிறுத்துமிடத்தில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து அங்கிருந்து அலறியடித்தபடி ஓடிய நிலையில், வெடிகுண்டுகள் நிரப்பிய கனரக வாகனத்துடன் வந்த தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவன், அந்த வணிகவளாகத்தின் பிரதான பகுதி மீது மோதி வெடிக்கச் செய்தான். இதில் வணிக வளாகத்தின் பல்வேறு அடுக்குகளில் இருந்த ஜன்னல் கண்ணாடிகளும், கட்டுமானங்களும் உடைந்து விழுந்து சேதமடைந்தது.
மேலும் வணிக வளாகத்துக்குள் இருந்த 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவுமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்க முன்வரவில்லை. எனினும், இந்த ஆண்டுக்குள் மேலும் பல இடங்களில் இத்தகைய குண்டுவெடிப்புகள் நிகழும் என ஐஎஸ் தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் கராடா மாவட்டத்தில் சந்தைப் பகுதியை குறிவைத்து ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்கு தலில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT