Published : 09 Jun 2017 01:09 PM
Last Updated : 09 Jun 2017 01:09 PM
பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் தெரசா மே ராஜினாமா செய்ய வேண்டும் என்று தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரமி கார்பின் கூறியுள்ளார்.
பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை முதல் நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப் படி கன்சர்வேடிவ் கட்சி 315 இடங்களையும், தொழிலாளர் கட்சி 261 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
650 உறுப்பினர்கள் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவைப்படும். நிலையில் இருபெருங்கட்சிகளும் அந்த எண்ணிக்கையை எட்டாததால் தொங்கு நாடாளுமன்றம் அமைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரமி கார்பின் கூறும்போது, "பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் தெரசா மே பதவி விலக வேண்டும் அரசியல் மாறிவிட்டது. முன்பு இருந்த பெட்டிக்குள் அது மீண்டும் செல்ல விரும்பவில்லை.
கன்சர்வேடிவ் கட்சி சிக்கன அரசியலை கையாண்டது. அவர்கள் இளைஞர்களுக்கு இந்த சமூதாயத்தில் கிடைக்கக்கூடிய அங்கீகாரத்தை அளிக்கத் தவறிவிட்டனர். இந்தத் தேர்தல் முடிவுகளை கண்டு நான் பெருமை அடைகிறேன். மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்துள்ளனர். சிக்கன அரசியலை மேற்கொண்டவர்களுக்கு தங்களது வாக்குகள் மூலம் பதிலளித்துள்ளனர்" என்றார்.
பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து தெரசா மே கூறும்போது, "தற்போது நாட்டுக்கு நிலைத்தன்மை அவசியமாகிறது. ஒருவேளை தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள்போல், கன்சர்வேடிவ் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றால் அந்த நிலைத்தன்மையை கன்சர்வேடிவ் கட்சி நிச்சயம் கொண்டுவரும்"என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT