Published : 03 Dec 2013 12:00 AM
Last Updated : 03 Dec 2013 12:00 AM

வங்கதேச பொதுத்தேர்தலை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய திங்கள்கிழமை கடைசி நாள். ஆனால் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் ஒருவர்கூட வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை.

பொதுத்தேர்தலை புறக்கணிப்போம் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், ஏற்கனவே நடைபெற்று வரும் முழுஅடைப்பு போராட்டத்தை மேலும் 2 நாள்கள் நீட்டிப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.

வங்கதேச நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் கடந்த அக்டோபர் 25-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்பின்னரும் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு ஆட்சியில் நீடித்ததால் எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தின. இதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மத்தியில் அமைச்சரவை கலைக்கப்பட்டு அனைத்துக் கட்சி அரசு அமைக்கப் பட்டது.

அந்த அரசின் தலைமையில் ஜனவரி 5-ம் தேதி பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வங்கதேச தேசியவாத கட்சி தலைமையிலான 18 கட்சிகள் அடங்கிய கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் சாராத இடைக்கால அரசை அமைக்க வேண்டும், அப்போதுதான் தேர்தல் நியாயமாக நடைபெறும் என்று அந்தக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக டிசம்பர் 30-ம் தேதி முதல் எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டம் மேலும் 2 நாள்களுக்கு நீட்டிக்கப்படுவதாக வங்கதேச தேசியவாத கட்சியின் மூத்த தலைவர் சலாலுதீன் அகமது தலைநகர் டாக்காவில் திங்கள் கிழமை தெரிவித்தார்.

இதனிடையே பொதுத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய டிசம்பர் 2-ம் தேதி கடைசி நாளாகும். ஆனால் இறுதி நாளான திங்கள்கிழமை எதிர்க்கட்சி வேட்பாளர்கள் யாரும் வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். பிரதமர் ஷேக் ஹசீனா, வங்கதேச தேசியவாத கட்சித் தலைவர் கலிதா ஜியா ஆகியோருக்கு அவர் ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளார். தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x