Published : 10 Feb 2014 07:36 PM
Last Updated : 10 Feb 2014 07:36 PM
நேபாளத்தின் புதிய பிரதமராக, நேபாள காங்கிரஸ் தலைவர் சுஷில் கொய்ராலா சுஷில் கொய்ராலா (75) இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேபாளத்தின் அரசியல் சாசன நிர்ணய சபைக்கு கடந்த நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 601 பேர் கொண்ட இந்த சபைக்கு 240 உறுப்பினர்கள் நேரடித் தேர்தல் மூலமும் 335 உறுப்பினர்கள் கட்சிகள் பெறும் வாக்கு சதவீதத்தின் விகிதாச்சாரத்தின்படியும் மீதமுள்ள 26 பேர் நேரடி நியமனம் மூலமும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பொதுத் தேர்தலில் நேபாள காங்கிரஸ் 194 இடங்களுடன் முதலிடத்தையும் சிபிஎன்- யுஎம்எல் (நேபாள கம்யூனிஸ்ட்) கட்சி 173 இடங்களுடன் இரண்டாம் இடத்தையும் பெற்றன.
யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் நேபாள காங்கிரஸும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து கூட்டணி அரசை அமைக்க அண்மையில் உடன்பாடு எட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற அரசியல் சாசன நிர்ணய சபை வாக்கெடுப்பில் நேபாள காங்கிரஸ் தலைவர் சுஷில் கொய்ராலா புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக 405 பேர் வாக்களித்தனர். சிபிஎன்- மாவோயிஸ்ட் தலைமையிலான கூட்டணியைச் சேர்ந்த 148 உறுப்பினர்கள் சுஷில் கொய்ராலாவை எதிர்த்து வாக்களித்தனர்.
நேபாளத்தின் புதிய அரசு ஓராண்டுக்குள் அரசியல் சாசனத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT