Published : 03 Dec 2013 09:19 AM
Last Updated : 03 Dec 2013 09:19 AM
தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரா இரண்டு நாள்களுக்குள் பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கெடு விடுத்துள்ளன.
அந்த நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்துள்ள கலவரம் பல்வேறு பகுதிகளுக்கு வேகமாகப் பரவி வருகிறது.
ஊழல், முறைகேடுகள் காரணமாக ஆளும் பிய் தாய் கட்சி பதவி விலக வேண்டும், நாட்டில் உடனடியாக பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த இரு வாரங்களாக எதிர்க் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஏற்பட்ட கலவரத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
9-வது நாளாக திங்கள்கிழமையும் போராட்டம் நீடித்தது. பல்வேறு இடங்களில் போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதற்குப் பதிலடியாக போலீஸார் மீது கற்களை வீசி ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.
ரகசிய இடத்தில் பிரதமர்
பிரதமர் யிங்லக் ஷினவத்ரா ஞாயிற்றுக்கிழமைக்குள் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கெடு விதித்திருந்தன. போராட் டம் வலுவடைந்திருப்பதால் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா ரகசிய இடத்துக்கு மாறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் முக்கிய எதிர்க் கட்சியான ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் சுதேப் தவுக்சுபன், பிரதமர் யிங்லக் ஷினவத்ராவை ரகசிய இடத்தில் சந்தித்துப் பேசினார். ராணுவ உயரதிகாரிகள் முன்னிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது இன்னும் 2 நாள்களுக்குள் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று சுதேப் தவுக்சுபன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தத் தகவலை எதிர்க்கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ளனர்.
அரசின் புதிய வியூகம்
பாங்காக்கில் உள்ள பெரும் பாலான அரசு அலுவலகங்கள் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவர்களை அங்கிருந்து விரட்ட அரசு புதிய வியூகம் வகுத்துள்ளது.
இதுதொடர்பாக தாய்லாந்தின் துணை பிரதமர் பிரச்சா பிரோம்நாக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணிவரை பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம். அந்த நேரத்தில் போலீஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஷினவத்ரா எச்சரிக்கை
எதிர்க்கட்சிகளின் 2 நாள் கெடு குறித்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரா செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது: நான் நிச்சயமாக பதவி விலக மாட்டேன். எதிர்க்கட்சிகளின் கோரிக்கைபடி சட்டத்துக்கு விரோதமாக, தேர்ந்தெடுக்கப்படாத ஓர் அமைப்பிடம் ஆட்சியை ஒப்படைக்கமாட்டேன். போராட்டத்தை ஒடுக்க எதற்கும் துணிந்துவிட்டேன். எனினும் இப்போதும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளேன் என்றார்.
போராட்டத்தில் ஆளும்கட்சி
ஆளும் பிய் தாய் கட்சி ஆதரவாளர்கள் தலைநகருக்கு படையெடுக்கத் தயாராகி வருகின்றனர். அவர்கள் தலைநகரில் குவிந்தால் கலவரம் கட்டுக்கடங்காத நிலைக்குச் சென்றுவிடும் என்று அரசியல் நோக்கர்கள் எச்சரித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT