Last Updated : 26 Mar, 2017 10:50 AM

 

Published : 26 Mar 2017 10:50 AM
Last Updated : 26 Mar 2017 10:50 AM

மாந்திரீகத்தை நாடுகிறதா மலேசியா?

எந்த தேசத்துடனாவது விரோதம் ஏற்பட்டால் பகை நாட்டின் மக்களை தன் தேசத்திலிருந்து அந்த அரசு வெளியேற்றும். இதுதான் இயல்பு. ஆனால் வட கொரியாவில் நேரெதிர். மலேசியர்களை பணயக் கைதிகளாக ஆக்கிக் கொண்டு அவர்கள் தங்கள் நாட்டை விட்டுச் செல்லக் கூடாது என்று தடை உத்தரவு போட்டிருக்கிறது வட கொரிய அரசு. பதிலுக்கு தங்கள் நாட்டில் பணியாற்றும் வட கொரியர்களை நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதித்திருக்கிறது மலேசியா. ஒரு படுகொலை இந்த இருநாடுகளுக்கான நல்லுறவைச் சிதைத்து விட்டது.

கடந்த பிப்ரவரி 13-ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் கிம் ஜோங் நாம் என்பவர் கொலை செய்யப்பட்டார். வட கொரியாவின் முன்னாள் அதிபரான கிம் ஜோங் இல் என்பவரின் மூத்த மகன்தான் கிம் ஜோங் நாம். இவர்தான் அடுத்த வாரிசு என்று வட கொரிய மக்கள் நினைத்துக் கொண்டிருக்க, எதிர்பாராத நிகழ்ச்சிகள் நடைபெற்று (ஜப்பானுக்குப் போலி பாஸ்போர்ட்டோடு நுழைந்தது அவற்றில் ஒன்று) இவர் தன் ஆட்சி வாய்ப்பை இழந்தார். 2003-ல் வட கொரியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதற்குப் பிறகு வட கொரிய ஆட்சியை விமர்சிப்பது இவரது வழக்கமானது, அவரது ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் உன் கைக்கு ஆட்சி சென்றது.

மலேசியாவிலிருந்து மக்காவ் என்ற சீன நாட்டுப் பகுதிக்குத் திரும்புவதற்காக (அங்குதான் அவர் அடைக்கலம் புகுந்திருந்தார்) கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்தார் கிம் ஜோங் நாம். அப்போது இரு பெண்கள் அவர் மீது வி.எக்ஸ். என்ற நச்சு ரசாயன திரவத்தை தெளித்தனர். இதில் அந்த இடத்திலேயே கிம் இறந்தார். அவரின் உடலை மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்யக் கூடாது என்று வட கொரிய அதிகாரிகள் கூறினார்கள். இதை மீறி பிரேதப் பரிசோதனை நடந்தது. இரு நாடுகளும் சேர்ந்து கூட்டு விசாரணையை நடத்த வேண்டுமென்று வட கொரியா கூற, மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் மறுத்தார்.

இந்த விவகாரத்தால், வடகொரியாவில் வசிக்கும் மலேசியர்கள் நாட்டைவிட்டு வெளியேற அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அதற்கு பதிலடியாக மலே சியாவில் வசிக்கும் வடகொரியர்கள் வெளியேற மலேசிய அரசு தடை விதித் துள்ளது. நல்லுறவை வளர்க்க 40 ஆண்டு கள் ஆகும். அதை சிதைக்க ஒரு நிகழ்ச்சி போதும் என்பார்கள். அதற்கு உதாரணங் களாகிவிட்டன வட கொரியாவும், மலேசியாவும்.

வட கொரியாவின் பிடியில் இருக்கும் மலேசியர்களை மீட்பதற்காகவும், தீய சக்திகளிடமிருந்து மலேசியாவைக் பாதுகாப்பதற்காகவும் ராஜா போமா இப்ராஹிம் மர்ட் சின் என்பவர் சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்.

யார் இவர்? மலேசியாவின் ராணுவத் தளபதியா? உளவுத்துறை அதிகாரியா? இல்லை. இவர் தன்னை டத்தோ மகாகுரு என்று அழைத்துக் கொள்கிறார். மாந்திரீகச் சடங்குகளில் ஈடுபட்டிருக்கிறார்.

கடற்கரையில் இரண்டு இளநீர், இரண்டு மூங்கில் குச்சிகள் (தொலை நோக்கியாம்!), பாய் விரிப்பு இவற்றுடன் கடற்கரையில் மாந்திரீகத்தில் ஈடுபட்டிருக் கிறார். தனது சடங்குகள் வட கொரிய அதிபரின் மனதை இளக வைக்கும் என்றும் இதனால் அவர் தன் பிடியில் இருக்கும் மலேசியர்களை விடுவித்து விடுவார் என்றும் கூறுகிறார். எல்லாவற்றுக்கும் உச்சமாக மலேசியாவையே பல வருடங்களாகத் தான்தான் தனது மந்திர சக்தியால் பாதுகாத்து வருவதாகவும் கூறுகிறார். ராஜா போமோவின் கடற்கரை மாந்திரீக சடங்குகள் காணொலி ஒன்றில் பரவலாகி வருகின்றன.

யூ ட்யூபில் வட கொரியா மற்றும் மலேசிய ராணுவங்களை ஒப்பிட்டு ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது. வட கொரியாவில் உள்ள சிப்பாய்களின் எண்ணிக்கை 11,95,000. மலேசியாவில் வெறும் 1,36,000 தான். வடகொரிய ராணுவ பீரங்கிகளின் எண்ணிக்கை 4,208. மலேசியாவில் உள்ளவை வெறும் 77 தான். வட கொரிய நீர்மூழ்கிக் கப்பல்களின் எண்ணிக்கை 70, மலேசியாவில் இருப்பது வெறும் 2 தான். இப்படி வர்ணிக்கிறது அந்த வீடியோ. வட கொரியா தன்னை சீண்டியவர்களிடம் எப்படி அடாவடித் தனமாக நடந்து கொள்ளும் என்பதை வரலாறு பார்த்திருக்கிறது. எனவே பய மேகங்கள் மலேசியாவில் வலம் வரத் தொடங்கிவிட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x