Published : 01 May 2014 10:43 AM
Last Updated : 01 May 2014 10:43 AM

உலகின் 3-வது பொருளாதார சக்தியாக உருவெடுத்த இந்தியா: உலக வங்கி தகவல்

2005-ல் உலகின் 10-வது பொருளாதார சக்தியாக இருந்த இந்தியா, 6 ஆண்டுகளில் அதாவது 2011-ல், ஜப்பானை பின்னுக்குத் தள்ளிவிட்டு உலகின் 3-வது பொருளாதார சக்தியாக உருவெடுத்ததாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

2005-ல் சீனாவுக்கு அடுத்து இரண்டாமிடத்தில் இருந்த அமெரிக்கா, 2011-லும் தனது நிலையை தக்கவைத்துக் கொண் டுள்ளது. உலக வங்கியில், இதன் ‘வளர்ச்சி புள்ளிவிவரக் குழு’ சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விவரம் வெளியிடப்பட்டது.

உலக வங்கி வரையறையின் அடிப்படையில், மிகப்பெரிய பொருளாதார சக்தியாக விளங்கும் 12 நாடுகளில், 6 நாடுகள் நடுத்தர வருவாய் பிரிவிலும் 6 நாடுகள் உயர் வருவாய் பிரிவிலும் வருகின்றன.

நடுத்தர வருமானப் பிரிவுக்குள் வரும் சீனா, இந்தியா, ரஷ்யா, பிரேசில், இந்தோனேசியா, மெக்ஸிகோ ஆகிய 6 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, உலக உற்பத்தியில் 32.3 சதவீதமாக உள்ளது.

உயர் வருவாய் பிரிவுக்குள் வரும் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி ஆகிய 6 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, உலக உற்பத்தியில் 32.9 சதவீதம் ஆகும்.

முதலீடுக்கான செலவு அடிப்படையில் சீனா (27%) முதலிடத்திலும், அமெரிக்கா (13%) இரண்டாவது இடத்திலும் உள்ளன. இதையடுத்து இந்தியா (7%), ஜப்பான் (4%), இந்தோனேஷியா (3%) ஆகிய நாடுகள் முறையே 3, 4 மற்றும் 5-வது இடத்தில் உள்ளன.

இந்த 12 நாடுகளையும் ஒருங்கிணைத்து கணக்கிட்டால், உலகின் மக்கள் தொகையில் 59 சதவீதம் கொண்டுள்ளன. அதேநேரம் பொருளாதார வளங்களில் மூன்றில் இரண்டு பங்கை பெற்றுள்ளதாக உலக வங்கியின் புள்ளிவிவரக் குழு தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x