Published : 12 May 2017 08:57 AM
Last Updated : 12 May 2017 08:57 AM
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமர் நரேந்திர நேற்றிரவு (வியாழக்கிழமை) சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக நேற்று கொழும்பு சென்றடைந்த அவரை விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வரவேற்றார்.
அதன் பின்னர் மோடி அந்நாட்டு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை கொழும்புவில் சந்தித்தார். பிரதமரின் இலங்கைப் பயணத்தில் ராஜபக்சேவை சந்திப்பது திட்டமிடப்படவில்லை. இருப்பினும், முன்னாள் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக இலங்கைக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
10 நாட்களுக்கு முன்னதாக ராஜபக்சேவின் ஆதரவாளர் ஒருவர் பிரதமர் மோடி இலங்கை வரும்போது கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தப்போவதாகவும் அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். ராஜபக்சேவின் ஆதரவாளர் அவ்வாறு கூறியிருந்த நிலையில் நேற்று நடந்துள்ள மோடி - ராஜபக்சே சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த 2015-ல் இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். தனது தோல்விக்கு இந்திய அரசே காரணம் என பகிரங்கமாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஆனால், அண்மையில் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்தப் பேட்டியில் பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டிப் பேசியதோடு. தன்னை மோடி மிகவும் கவர்ந்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.
மோடியை ராஜபக்சே பாராட்டிய சில நாட்களிலேயே மோடி - ராஜபக்சே சந்திப்பு நிகழ்ந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT