Published : 06 Jun 2017 10:59 AM
Last Updated : 06 Jun 2017 10:59 AM
லண்டன் பாலத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் இருவரது பெயரை அந்நாட்டு போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து லண்டன் போலீஸார் வெளியிட்ட தகவலில், "லண்டன் பாலத்தில் சனிக்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்திய மூன்று தீவிரவாதிகளில் சுட்டுக் கொல்லப்பட்ட இருவரது பெயர் தெரியவந்துள்ளது.
ஒருவர், குராம் ஷாசத் பட் (27) பாகிஸ்தானில் பிறந்தவர். மற்றொருவர் ரஜித் ரிடோனே லிபியாவைச் சேர்ந்தவர். மூன்றாவது நபரை பற்றியத் தகவலை சேகரித்து வருகிறோம்.
மேலும் லண்டன் தாக்குதல் தொடர்பாக 10 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு போலீஸார் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.
தெரசா மே-க்கு வலுக்கும் எதிர்ப்பு
கடந்த 3 மாதங்களில் இங்கிலாந்தில் மிகப்பெரிய மூன்று தீவிரவாதத் தாக்குதல் நடந்துள்ளதால், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே-க்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இங்கிலாந்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தீவிரவாதத் தாக்குதலை தடுக்கத் தவறிய தெரசா மே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்க் கட்சி தலைவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.இது தெரசா மே-க்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெர்மி கார்பின் கூறும்போது, "தெரசா மே- வை ராஜினாமா செய்ய வலியுறுத்துபவர்களை நான் ஆதரிக்கிறேன். அவர் தன் கடமையிலிருந்து தவறிவிட்டார். இதற்கான முடிவை அவர் தேர்தலில் காண்பார்" என்றார்.
லண்டன் மேம்பாலத்தில் சனிக்கிழமை இரவு தாறுமாறாக ஓடிய வெள்ளை நிற வேன் ஒன்று அப்பகுதியில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. பின்னர் அந்த வேன் பாரோ சந்தைப் பகுதிக்கு செலுத்தப்பட்டது. அங்குள்ள பாரோ சந்தைப் பகுதியில் நுழைந்தது. அந்தப் பகுதியில் வேனை நிறுத்திய தீவிரவாதிகள் அப்பகுதியிலிருந்த மக்களை கத்தியால் குத்தினர். இந்த இரு சம்பவங்களில் 7 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT