Published : 15 Oct 2014 06:27 PM
Last Updated : 15 Oct 2014 06:27 PM
இந்து மதக் கடவுள்களின் படங்களைக் கொண்டு டிசைன் செய்யப்பட்ட லெக்கிங்ஸ் வகைகள் பட்டியலை அமேசான் நிறுவனம் தனது இணையதளத்தில் இருந்து நீக்கியது.
அமெரிக்காவின் வாஷிங்டனின் சியேட்டிலை தலைமையாகக் கொண்ட சர்வதேச மின் வணிக நிறுவனமான அமேசான், இணையத்தின் மூலம் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது. தனது சொந்த தயாரிப்பான அமேசான் கிண்டில், கிண்டில் ஃபயர், ஃபயர் டிவி, செல்போன்கள், உடைகள் போன்ற பொருட்களை தயாரித்து விற்பனை செய்து இணைய வர்த்தகத்தில் சிறந்து விளங்கிய நிலையில், ஆடை வகைகளையும் வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது.
இந்த நிறுவனம் சமீபத்தில் யிஸ்ஸாம் பிராண்ட் வரிசையில், பெண்கள் அணியும் லெக்கிங்ஸ்களை இந்து மதக் கடவுள்களின் ஓவியங்களைக் கொண்டு வடிவமைத்துள்ளது. இதில் பிள்ளையார், சிவன், பிரம்மா, விஷ்ணு, முருகன், அனுமான், ராமர், ராதா கிருஷ்ணர், காளி படங்களை விதவிதமான முறையில் டிசைன் செய்து விற்பனைக்கான ரகங்களை தனது இணையதளத்தில் பட்டியலிட்டிருந்தது அமேசான் நிறுவனம்.
அமெரிக்காவில் இந்த லெக்கிங்ஸ் பலரது வரவேற்பை பெற்று இருந்தாலும், இதற்கு இந்து மத அமைப்புகளின் சார்பில் கடுமையான எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டன.
அமெரிக்காவில் செயல்படும் உலகளாவிய இந்து மதச் சமூகம் என்ற அமைப்பு, 'இந்துக் கடவுள்களை தவறாக சித்தரிக்கும் வகையில் உள்ள லெக்கிங்ஸ் பட்டியலை தங்களது இணையதளத்திலிருந்து நீக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்திருந்தது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் ராஜன் சேத் மற்றும் இந்து அமைப்பு ஆதரவாளர்கள் அமேசான் நிறுவனத்துக்கு எதிராக குரல் எழுப்பினர்.
'இந்துக்கள் கலைப் பண்பை வெளிப்படுத்துவதற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் தங்களது மதத்தின் மீது விசுவாசமும் பற்றும் உடையவர்கள். பல கோடி மக்கள் வழிபடும் கடவுள்களின் படங்களை கொண்டு, ஆடைகளை வடிவமைப்பது ஏற்கக் கூடியது அல்ல. இந்த நிலையில், அமேசான் நிறுவனம் லெக்கிங்ஸ்களில் ஏற்கத்தகாத வகையில் இந்துக் கடவுள்களை சித்தரித்துள்ளது மன வேதனை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்து மதத்தை பின்பற்றுவோரை மன உலைச்சலுக்கு உள்ளாக்குகிறது.
ஆகவே, சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் உள்ள ஆடைகள் கொண்ட பட்டியலை உடனடியாக அமேசான் நிறுவனம் தனது இணையதளத்திலிருந்து நீக்க வேண்டும். இந்த தவறுக்கு அந்த நிறுவனம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்" என்று வலியுறுத்தி இருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, இந்துக் கடவுள்களின் படங்களை சித்தரித்து வடிவமைக்கப்பட்ட லெக்கிங்ஸ் பட்டியலை தனது இணையதளத்திலிருந்து அமேசான் நிறுவனம் நீக்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT