Last Updated : 01 Dec, 2013 12:00 AM

 

Published : 01 Dec 2013 12:00 AM
Last Updated : 01 Dec 2013 12:00 AM

சூரியனை நெருங்கியபோது வெப்பத்தால் சிதறிய ஐசான்

இந்த நூற்றாண்டின் வால் நட்சத்திரம் என்று போற்றப்பட்ட ஐசான் வால் நட்சத்திரம் கடந்த வியாழக்கிழமை இரவு சூரியனை நெருங்கிய போது சூரிய வெப்பத்தால் சிதறிப் போனது.

நம் பார்வையிலிருந்து மறைந்து போன ஐசான் வால் நட்சத்திரம் முற்றிலும் சிதைந்து போனது என விஞ்ஞானிகள் பலரும் வருத்தமடைந்த நேரத்தில், அதன் ஒரு சிறு பகுதியாவது சூரிய வெப்பத்திலிருந்து தப்பி வெளியே வரும் என இன்னொரு தரப்பு விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

சூரிய குடும்பத்துக்கு அப்பால் உள்ள ஊர்ட் மேகப் பகுதியிலிருந்து ஐசான் என்ற வால் நட்சத்திரம் சூரியனை நோக்கி வருவதை விட்டாவி நெவ்ஸ்கி, ஆர்டியோம் நோவிசோனாக் என்ற இரு ரஷ்ய விஞ்ஞானிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் 21-ஆம் தேதி கண்டறிந்தனர்.

அதன் பின் ஐசான் குறித்த செய்திகள்தான் உலகம் முழுவதும் வானவியல் அறிஞர்கள் மத்தியில் மிக முக்கிய விவாதப் பொருளாக மாறியது. இந்த நூற்றாண்டின் மிகப் பிரகாசமான வால் நட்சத்திரமாக ஐசான் திகழப் போகிறது. நீண்ட தொலைவிலிருந்து வரும் அந்த வால் நட்சத்திரம் சூரியனை ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் தான் புறப்பட்ட இடத்தை நோக்கி திரும்பிச் செல்லும் என்றும், அவ்வாறு சூரியனை விட்டு விலகத் தொடங்கிய பின் அடுத்த சில நாள்களுக்கு மிகப் பிரகாசமாக காட்சி தரும் என்றும் விஞ்ஞானிகளில் ஒரு தரப்பினர் கூறினர்.

சூரியனை நெருங்கும்போது சூரியனின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு எரிந்து சிதைந்து போகும் என மற்றொரு தரப்பினர் கூறி வந்தனர்.

இந்நிலையில் சூரியனை மிக அருகில் ஐசான் நெருங்கிச் சென்ற நவம்பர் 28-ம் தேதி இரவு உலகம் முழுவதும் அறிவியலாளர்கள் ஆர்வத்துடன் ஐசான் நகர்தலைக் கண்காணித்து வந்தனர். பல்வேறு நாடுகளின் 18 விண்கலங்கள் ஐசானைக் கண்காணித்தபடி இருந்தன. ஆனால், ஐசான் விஞ்ஞானிகளின் பார்வையிலிருந்து மறைந்து போனதால் வானவியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.

சூரியனிலிருந்து சுமார் 12 லட்சம் கி.மீ. தொலைவில் அதன் அருகே ஐசான் சென்றபோது சூரிய வெப்பத்தின் கடுமையைத் தாக்குப்பிடிக்க முடியாத ஐசான் வால் நட்சத்திரத்தின் பகுதிகள் சிதைந்து போனதாகவும், இதன் காரணமாகவே அது நம் பார்வையிலிருந்து மறைந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

எனினும் இப்போது ஒரு சிறு ஒளிக்கீற்று தெரியத் தொடங்கியுள்ளதாகவும், அது சூரிய வெப்பத்திலிருந்து தப்பிப் பிழைத்த வால் நட்சத்திரத்தின் உட்கருவாக இருக்கக் கூடும் எனவும் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் உள்பட பலர் கூறியுள்ளனர்.

எனினும், எஞ்சிய அந்த மிச்ச சொச்சப் பகுதியும் எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும் என்பதையோ, சூரியனை விட்டு விலகிய பின் அதன் பிரகாசம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதைப் பற்றியோ இப்போது கணிக்க இயலாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளர் சி.ராமலிங்கம் கூறுகையில், ‘ஐசானின் ஒரு பகுதி தப்புமா, அவ்வாறு அது தப்பினாலும் கூட பிரகாசம் தருமா என்பதற்கெல்லாம் விடை தெரியாமல் விஞ்ஞானிகளே குழம்பியுள்ளனர். இதற்கெல்லாம் விடை அறிய இன்னும் இரண்டு, மூன்று தினங்கள் காத்திருக்க வேண்டும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x