Published : 12 Oct 2014 09:26 AM
Last Updated : 12 Oct 2014 09:26 AM
எல்லையில் சண்டை நடைபெற்று வரும் நிலையில், இந்தியா மீது போர் தொடுக்க வேண்டும் என்று தீவிரவாத அமைப்பான ஜமாத் உத்-தவா பாகிஸ்தான் அரசை கேட்டுக் கொண்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் கராச்சி நகரில் உள்ள பத்திரிகையாளர் மன்றம் அருகே நேற்று முன்தினம் பேரணி நடைபெற்றது. ஏராளமானோர் கூடியிருந்த இந்த பேரணியில் அந்த அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நடைபெறும் துப்பாக்கிச் சண்டைக்கு கண்டனம் தெரிவித்து பேசிய அவர், இந்திய ராணுவத்தின் தாக்குதலால் பாகிஸ்தானைச் சேர்ந்த அப்பாவி மக்கள் பலியாவதாக குற்றம்சாட்டினர்.
இதற்கிடையே, இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ‘இந்தியா மீது போர் தொடுக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பேனர்கள் மற்றும் பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டனர். சர்வதேச எல்லை விதியை இந்தியா மீறி வருவதாகவும் குற்றம்சாட்டினர். இந்தியாவின் அச்சுறுத்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பாகிஸ்தானுக்கு தெரியும் என்றும் இந்த விஷயத்தில் ராணுவத்தின் செயல்பாட்டுக்கு துணை நிற்போம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜமாத்-உத்-தவா அமைப்பின் கராச்சி பிரிவு தலைவர் முசம்மில் இக்பால் ஹஷ்மி கூறும்போது, “இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆக்ரோஷமான கொள்கையின் ஒரு பகுதியாகவே சியால்கோட் எல்லைப் பகுதியில் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
பாகிஸ்தானில் உள்ள உள்நாட்டு பிரச்சினையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அவர் விரும்புகிறார். நாட்டை பாதுகாப்பதற்காக தங்கள் உயிரை தியாகம் செய்ய ஒவ்வொரு குடிமகனும் தயாராக உள்ளனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT