Published : 25 Mar 2017 04:21 PM
Last Updated : 25 Mar 2017 04:21 PM
பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு வெளியே தீவிரவாதத் தாக்குதலை நடத்திய காலித் மசூத் என்ற நபர் சவுதி அரேபியாவில் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக இருந்துள்ளார்.
நவம்பர் 2005 முதல் நவம்பர் 2006 வரையிலும் பிறகு ஏப்ரல் 2008 முதல் ஏப்ரல் 2009 வரையிலும் சவுதி அரேபியாவில் ஆங்கிலம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார் என்று சவுதி அரேபியா தூதரகம் தெரிவித்துள்ளது.
அவரிடம் பணிக்கான விசா இருந்ததாகவும் மார்ச் 2015-ல் அவர் 6 நாட்கள் வந்து சென்றதாகவும் தூதரகம் கூறுகிறது.
சவுதி அரேபியாவில் இவருக்கு குற்றத் தொடர்புகள் இருந்ததற்கான வழக்குகளோ, குற்றப்பதிவுகளோ இல்லை. மசூத் என்ற பெயரை இவர் சூட்டிக் கொள்ளும் முன் அட்ரியன் எல்ம்ஸ் என்று இவர் அறியப்பட்டார். மிகவும் கோபக்காரரான இவர் வன்முறைக் குற்றங்கள் தொடர்பாக இங்கிலாந்தில் இருமுறை குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
கடந்த புதனன்று மசூத் வெஸ்ட்மின்ஸ்டர் பிரிட்ஜில், பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு வெளியே மக்கள் கூட்டம் மீது காரை ஏற்றினார், இதில் 4 பேர் பலியாகினர். பிறகு காரிலிருந்து வெளியே குதித்து போலீஸ் அதிகரி கெய்த் பால்மர் என்பவரை பெரிய கத்தியால் பலமுறை குத்திக் கொன்றார். பிறகு போலீசாரால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவர் எப்படி தீவிரவாதத்திற்கு வந்தார் என்ற விவரங்கள் தெரியவில்லை. சவுதி அரேபியாவில் அவர் வாழ்ந்த காலக்கட்டத்தைத் தோன்டினால் ஒருவேளை ஏதாவது துப்புக் கிடைக்கலாம். இவர் பிரிட்டன் சிறையிலும் இருந்துள்ளார். சிறையில் இவர் தீவிரவாத தொடர்பு பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT