Published : 02 May 2017 08:44 PM
Last Updated : 02 May 2017 08:44 PM
வடகொரியாவை கடுமையாக விமர்சித்துவரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அதிரடி திருப்பமாக அந்நாட்டு அதிபர் கிம்ஜோங் உன்னை சந்திக்கத் தயாராக இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு உலக அரங்கில் அதிமுக்கியத்துவம் பெற்றுள்ளது.
இருப்பினும் இப்போதைக்கு வட கொரிய அதிபருடன் சந்திப்பு நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகளே இல்லை என வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.
ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்துக்கு ட்ரம்ப் அளித்த பேட்டியின்போது, "அவரை நான் சந்திப்பது தகுந்த நடவடிக்கையாக இருக்குமென்றால் உகந்த சூழல் ஏற்படும்போது அதை நான் நிச்சயமாக செய்வேன். அதை செய்வதில் நான் பெருமை கொள்வேன்" என ட்ரம்ப் கூறியிருந்தார்.
ஆனால், தனது வாக்கியத்தின் சக்தியை உணர்ந்த அவர், "உங்களுக்கு நாங்கள் ஒரு பிரேக்கிங் நியூஸ் வைத்திருக்கிறோம்" என்றார்.
இதுவரை பதவியில் இருந்த எந்த ஒரு அமெரிக்க அதிபரும் வடகொரிய தலைவரை சந்தித்ததில்லை. இந்நிலையில் ட்ரம்பின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக வடகொரியாவின் தொடர் அணுஆயுத ஏவுகணை சோதனைகளைத் தொடர்ந்து, அமெரிக்கா அந்நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்தது.
ஆனால் அந்த எச்சரிக்கைகளையெல்லாம் பொருட்படுத்தாத வடகொரியா அதிக திறன் வேகம் கொண்ட அணுஆயுத ஏவுகணை சோதனையை எந்த நேரத்திலும் நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளது.
இத்தகைய சூழலில் "உகந்த சூழலில் கிம்மை சந்திக்கத் தயார்" எனத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT