Published : 28 Nov 2013 12:00 AM
Last Updated : 28 Nov 2013 12:00 AM

"ஈரானுடன் ஒப்பந்தம் சரியானதே!" : நியாயப்படுத்துகிறது அமெரிக்கா

ஈரானின் அணு சக்தி திட்டங்கள் தொடர்பாக ஜெனிவாவில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தை நியாயப்படுத்தியுள்ளது அமெரிக்கா.

அமெரிக்காவின் முக்கிய தோழமை நாடான இஸ்ரேல் இந்த ஒப்பந்தம் தொடர்பாக கடும் அதிருப்தி கொண்டுள்ளது. குடியரசுக் கட்சியினரும் இந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்க்கின்றனர்.

இந்நிலையில், ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா எடுத்துள்ள நிலையை நியாயப்படுத்தியுள்ளார் அதிபர் பராக் ஒபாமா

அணு சக்தி திட்டங்களில் ஈரானுக்கு கட்டுப்பாடு விதிக்கும் ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் பல்வேறு சவால்களை சமாளிக்க வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார் ஒபாமா.

ஈரானின் அணு சக்தித்திட்டங்கள் ஆக்கபூர்வ நோக்கங்களுக்கல்ல. அணு ஆயுதத் தயாரிப்புக்காகவே என உலக நாடுகள் எழுப்பிய சந்தேகத்தின் காரணமாக அந்த நாடு மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.அந்த தடைகளை அகற்ற இந்த இடைக்கால ஒப்பந்தம் வகை செய்கிறது.

‘மதி நுட்பத்துடன் பேசி ஈரானுடனான பிரச்சினைக்கு தீர்வு காணலாம். வரும் மாதங்களில் தொடங்கும் இந்த சமரச பேச்சின் பலனாக, ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மூலமாக வரக்கூடிய ஆபத்துக்கு முடிவு காண முடியும். ஈரானுடன் கடுமையாக பேசுவது மட்டுமே அமெரிக்காவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தந்து விடாது’

‘ஈரானின் அணு சக்தி திட்டங்களை நிறுத்த 10 ஆண்டுகளில் இப்போதுதான் இந்த ஒப்பந்தம் மூலம் வழி ஏற்பட்டுள்ளது’ என்றார் ஒபாமா.

இந்நிலையில் உலக வல்லரசு நாடுகள் ஒப்பந்தத்தை அமல்படுத்த உள்ளதால் ஐரோப்பிய கூட்டமைப்பு ஈரான் மீது விதித்துள்ள தடைகளை விலக்கிக்கொள்ளும் என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

அணு ஆயுத வல்லமையை பெறக் கூடிய சுதந்திரம் இந்த ஒப்பந்தம் மூலம் தனக்கு கிடைத்துள்ளது என்பதை உலகுக்கு தெஹ்ரான் உரைக்க வகை செய்துள்ளது என்று எச்சரித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் தொடர்பாக பேச வாஷிங்டனுக்கு தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகரை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளார். -ஏ.எப்.பி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x