Published : 28 Apr 2017 11:18 AM
Last Updated : 28 Apr 2017 11:18 AM
வடகொரியாவுடன் மிகப் பெரிய அளவில் மோதல் ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஓவல் அலுவலகத்தில் வியாழக்கிழமையன்று ராய்ட்டர்ஸ் நிறுவன நேர்காணலில் பங்கேற்ற ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக ட்ரம்ப் கூறும்போது, "வடகொரியா உலகிற்கு பெரும் சவாலாக இருக்கிறது. அணுஆயுத ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வரும் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மிகப் பெரிய மோதல் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனினும் அமெரிக்கா இந்த விவகாரத்தை பேச்சு வார்த்தை மூலமே தீர்க்க விரும்புகிறது. ஆனால் அது கடினமானது என்று நினைக்கிறேன்" என்றார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் குறித்த கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், ”வடகொரியா விவகாரத்தில் அமைதி ஏற்பட சீன அதிபர் ஜி ஜின்பிங் பெரும் முயற்சி செய்தார் என்று நம்புகிறேன். இரு நாடுகளுக்கிடையே சண்டை யினால் மரணங்கள் ஏற்பட விரும்பவில்லை. அவர் நல்ல மனிதர். நான் சீனாவையும், சீன மக்களையும் நேசிக்கிறேன்" இவ்வாறு கூறினார்.
முன்னதாக வடகொரியா 6-வது முறையாக அணுஆயுத சோதனை நடத்த தயாராகி வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, அணுஆயுத சோதனை நடத்தினால் அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரிக்கை விடுத்தது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன், நீர் மூழ்கி போர்க்கப்பல் யு.எஸ்.எஸ். மிக்ஸிகன் ஆகியவை தென்கொரியாவில் முகாமிட்டுள்ளன. வடகொரியாவின் ஏவுகணை தாக்குதலைச் சமாளிக்க அமெரிக்காவின் ஹவாய் பகுதியில் ஏவுகணை தடுப்பு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இதனிடையே அணுஆயுத சோதனையை ஒருபோதும் கைவிட மாட்டோம். எத்தகைய போருக்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என்று வடகொரியா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT