Last Updated : 22 Jun, 2017 01:41 PM

 

Published : 22 Jun 2017 01:41 PM
Last Updated : 22 Jun 2017 01:41 PM

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மனநிலை பிறழ்ந்தவர்: வடகொரியா கடும் தாக்கு

அமெரிக்க மாணவர் ஓட்டோ வார்ம்பியர் வடகொரிய சிறையில் சித்ரவதைச் செய்யப்பட்டு மரணமடைந்ததையடுத்து பதற்றமான சூழல் நிலவுவதையடுத்து பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக அதிபர் ட்ரம்ப்பை மனநிலை பிறழ்ந்தவர் என்று வடகொரியா வர்ணித்துள்ளது.

வடகொரியாவின் அரசு நாளிதழான சின்மன் செய்தித் தாளில் எழுதப்பட்ட தலையங்கத்தில் அமெரிக்க அதிபர் கடினமான சூழ்நிலையில் இருப்பதாகவும் எனவே மக்களை திசைத் திருப்ப வடகொரியா மீது முன் தவிர்ப்புத் தாக்குதலை நடத்தி விடலாம் என்ற யோசனையுடன் விளையாடி வருகிறது அமெரிக்கா என்று சாடியுள்ளது.

மேலும் “மனநிலை பிறழ்ந்த ட்ரம்பின் ஆலோசனைகளைப் பின்பற்றினால் தென் கொரியாவுக்கு பேரழிவு ஏற்படும் என்பதை அந்நாடு உணர வேண்டும்” என்றும் அந்தத் தலையங்கம் தெரிவித்துள்ளது.

22 வயது வார்ம்பியர் வடகொரிய விடுதி ஒன்றிலிருந்து அரசியல் போஸ்டர் ஒன்றைத் திருடியதாகக் கைது செய்யப்பட்டு கடினமான உழைப்புச் சித்ரவதைக்கு ஆட்படுத்தப்பட்டார். 18 மாதங்கள் சித்ரவதையை அனுபவித்த வார்ம்பியர் கடந்த வாரம் கோமா நிலையில் சிறையிலிருந்து மீட்கப்பட்டார்.

இவர் திங்களன்று கடுமையான மூளைச் சேதத்தின் காரணமாக சின்சினாட்டியில் மரணமடைந்தார். இவரது சித்ரவதை, மரணம் அமெரிக்காவை உலுக்கி விட்டது.

இதனையடுத்து வடகொரியாவின் கொடூரமான ஆட்சிமுறை குறித்து ட்ரம்ப் கடும் விமர்சனம் வைத்தார். அதாவது அடிப்படை மனித நாகரிகமின்றி சிறிய குற்றத்துக்காக பெரிய தண்டனை விதித்து கடும் சித்ரவதைகளை செலுத்தித் தண்டிப்பது என்ற வடகொரியாவின் அராஜகத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று சாடினார்.

இந்நிலையில் அதிபர் ட்ரம்ப்பை ‘மனநிலை பிறழ்ந்தவர்’ வடகொரியா வர்ணித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x