Published : 06 Feb 2014 10:45 AM
Last Updated : 06 Feb 2014 10:45 AM
துபையில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் காலிபாவின் மேல் தளத்துக்கு கடந்த 2013ம் ஆண்டு 18.7 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
828 மீட்டர் உயரம் கொண்ட இந்தக் கட்டிடம் 163 தளங்கள் கொண்டது. இதன் கட்டுமானப் பணி 2004, செப்டம்பர் 21ம் தேதி தொடங்கியது. 2010ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி இக்கட்டிடம் திறக்கப்பட்டது.
இதன் மேல் தளத்தில் இருந்து நகரின் அழகை நன்கு ரசிக்க முடியும் என்பதால், சுற்றுலாப் பயணிகள் இங்கு மீண்டும், மீண்டும் வருவதாக இக்கட்டிடத்தை நிர்வகித்து வரும் எமார் பிராபர்ட்டீஸ் செயல் இயக்குநர் அகமது அல் பலாசி கூறுகிறார்.
இந்த கட்டிடத்தின் மேல் தளத்துக்கு கடந்த 2013ம் ஆண்டு 18.7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர். இவர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வெளிநாட்டினர். இதில் அதிகபட்சமாக ஜெர்மனியர்கள் 23 சதவீதம் பேர் வந்துள்ளனர். இவர்களை அடுத்து இங்கிலாந்து (15%), ரஷியா, இந்தியா (11%) அமெரிக்கா (10%) சவூதி அரேபியா (7%) ஆஸ்திரேலியா, இத்தாலி, சீனா (5%), பிரான்ஸ், நெதர்லாந்து (4%) ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் வருகை தந்துள்ளனர்.
இந்த கட்டிடத்தின் 4ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, வரும் பிப்ரவரி 28ம் தேதி வரை வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நகரின் சூரிய உதயத்தை காண பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT