Published : 26 Feb 2014 09:20 AM
Last Updated : 26 Feb 2014 09:20 AM

இலங்கையின் வடக்கு பகுதி புதைகுழியில் 80 எலும்புக்கூடுகள்- போரில் மாயமான தமிழர்களா?

இலங்கையின் வடக்கு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியை தோண்டியபோது இதுவரையில் 80 மனித எலும்புக் கூடுகள் சிக்கியுள்ளன. இவை போரின்போது காணாமல் போன தமிழர்களுடையதாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த எலும்புக் கூடுகள் அனைத்தும் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நீதித்துறை மருத்துவ அலுவலர் தனஞ்செய வைத்யரத்னா தெரிவித்தார்.

புதைகுழியை தோண்டிப்பார்க்கும் பணி இடையில் சில தினங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் திங்கள்கிழமை தொடங்கியது. மன்னார் மாவட்டம் திருக்கேத்தீஸ்வரம் பகுதியில் குடிநீர் குழாய் புதைக்க ஊழியர்கள் மண்ணை தோண்டியபோது 4 மனித எலும்புக்கூடுகள் கிடைத்தன. அதையடுத்தே மேலும் பலர் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வலுத்து அந்த இடத்தை தோண்டிப்பார்க்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் விசாரணைக்குப் பிறகு தடயவியல் மருத்துவத்துறை அதிகாரிகள் பங்கேற்புடன் தோண்டும் பணி நடக்கிறது. இந்த புதைகுழியில் பெண்கள், குழந்தைகள் புதைக்கப்

பட்டிருக்கலாம் என அதிகாரிகள் முன்னதாக தெரிவித்தனர்.

இங்கு புதைக்கப்பட்டவர்கள் எப்படி கொல்லப்பட்டனர், எப்போது புதைக்கப்பட்டனர் என்பதை உறுதி செய்ய மேலும் பரிசோதனை அவசியம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

தோண்டி எடுக்கப்பட்ட எலும்புக் கூடுகள் அனைத்தும் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம் என உள்ளூர் தலைவர்கள் சந்தேகிக்கின்றனர். விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையேயான போரின்போது மன்னார் பகுதி பல்வேறு தாக்குதலை சந்தித்தது. இந்த பகுதி தமிழர்கள் நிறைந்த பகுதியாகும். புலிகளுடனான போர் 2009ல் முடிவுக்கு வந்த பிறகு ஒரே இடத்தில் ஏராளமானோர் புதைக்கப்பட்டிருப்பது முதல் தடவையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த புதைகுழிக்கும் ராணுவத்துக்கும் சம்பந்தம் இருக்க வாய்ப்பு இல்லை என இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது. மாத்தளையிலும் ஏராளமானோர் புதைக்கப்பட்ட புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டு அங்கும் விசாரணை நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x