Published : 21 Jan 2014 10:21 AM
Last Updated : 21 Jan 2014 10:21 AM
பாகிஸ்தான் விஷயத்தில் அமெரிக்கா ஓர் உறுதியான நிலைப்பாடு எடுக்க வேண்டிய கால நெருக்கடி உருவாகிவிட்டதாகவே தோன்றுகிறது.
ஜனவரியில் இது ஆரம்பிக்கும் என்று போன மாசம் எழுதியிருந்தேன். இதோ தொடங்கிவிட்டது. பாகிஸ்தானில் உள்ள தலிபான்களின் கோரத்தாண்டவம். நவாஸ் ஷெரீஃபின் நிம்மதியை சர்வ நாசம் செய்து துண்டைக் காணோம் துணியைக் காணோமென்று கதறியோடச் செய்வதற்கான பிள்ளையார் சுழிகள்.
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் புறப் பகுதியில் உள்ள ஒரு ராணுவ முகாமுக்குள் தற்கொலைப் போராளியை அனுப்பி, வீரர்களைச் சுமந்து வந்த ராணுவ வாகனத்தை மோதித் தகர்த்து இருபத்திரண்டு பேரைக் கொன்று, முப்பத்தியெட்டுப் பேரை படுகாயமுறச் செய்துவிட்டு, கையோடு நாங்கள்தான் செய்தோம் என்று அறிவித்தும் விட்டார்கள்.
தீவிரவாதத்தை எங்கள் அரசு சும்மா விடாது, மக்கள் எங்களோடு கைகோப்பார்கள் என்று பத்து காசுக்குப் பிரயோசனமில்லாத வசனங்களில் இதனைக் கடந்துவிடப் பார்க்கிறார் பாக். பிரதமர். உண்மையில் தலிபான்கள் ஆரம்பித்திருக்கும் இந்தப் புதிய யுத்தமானது இதுநாள் வரை இல்லாத அளவுக்குப் பாகிஸ்தானின் நிம்மதியக் கபளீகரம் செய்துவிடும் என்றே தோன்றுகிறது.
பிபிசி தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டியளித்த பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் கமாண்டர்களுள் ஒருவரான மெஹ்ஸூத், தங்களின் உக்கிர தாண்டவத் திருவிழாவுக்கு இரண்டு காரணங்களைச் சொல்லியிருக்கிறார். பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வரும் அனைத்து உதவிகளையும் நிறுத்தித் தொலைத்துவிட்டு, அந்த மண்ணில் இருந்து முற்று முழுதாக வெளியேறும் வரை தங்கள் தாக்குதல் தொடரத்தான் செய்யும் என்பது முதல் பாயிண்ட்.
இரண்டாவது, பாகிஸ்தான் அரசின் இஸ்லாம் விரோத ஆட்சி முறை. அதாவது தலிபான்கள் விரும்பும் அடிப்படைவாத ஆட்சியாக அது இல்லை என்பது.
இஸ்லாம் விரோதமோ, மக்கள் விரோதமோ - தீவிரவாத விரோத ஆட்சி என்பதை நிறுவுவதற்குத்தான் நவாஸ் ஷெரீஃப் படாதபாடு பட் டுக்கொண்டிருக்கிறார். ஒரு புறம் தலிபான்களுக்கு எதிரான நடவடிக் கைகளில் ஆர்வம் காட்டுபவர்போல நடந்துகொண்டாலும், மறுபுறம் பழைய பாசத்தை விட்டுக்கொடுக்காமல் இழுத்துப் பிடிக்க ரகசிய முயற்சிகளை பாகிஸ்தான் அரசு மேற்கொள்கிறதோ என்கிற சந்தேகம் பாகிஸ்தான் மக்களுக்கே வந்திருக்கிறது.
அமெரிக்காவை எத்தனை நம்பலாம் என்கிற தெளிவு நவாஸ் ஷெரீஃபுக்கு இல்லை. இப்போதைக்கு உதவிகள் வரு கின்றன. பாகிஸ்தான் பிழைத்திருப்பதற்கே அமெரிக்க உதவிகள்தான் காரணம் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். ஆனால் இது இன்னும் எவ்வளவு காலம் தொடரும் என்று தெரியாத நிலையில், அமெரிக்காவைத் திருப்திப்படுத்துவதற்காக தலிபான்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகக் காட்டிக்கொண்டு, ரகசியமாக அவர்களோடு முஸ்தபா முஸ்தபா பாடவே ஷெரீஃப் விரும்புகிறாரோ என்கிற ஐயம் ஏற்படுகிறது.
ஷெரீஃபை விட்டுவிடலாம். பாகிஸ்தான் விஷயத்தில் அமெரிக்கா ஓர் உறுதியான நிலைப்பாடு எடுக்கவேண்டிய கால நெருக்கடி உருவாகிவிட்டதாகவே தோன்றுகிறது. உதவிகளைப் படிப்படியாகக் குறைத்து, முற்றிலும் நிறுத்துவதற்கான கெடு தேதியை அத்தேசம் அறிவிப்பதன்மூலம்தான் நவாஸ் ஷெரீஃபின் தெளிவான நிலைப் பாட்டை அறிய இயலும். அது இல்லாமல், இப்படியே இது தொடரும் பட்சத்தில் ராணுவ இலக்குகள், சிவிலியன் இலக்குகள் என்கிற பேதம் மறைந்துபோய் பாகிஸ்தானைத் தலிபான்கள் இன்னொரு இராக்காக ஆக்கிவிடுவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT