Published : 07 Oct 2014 11:32 AM
Last Updated : 07 Oct 2014 11:32 AM
உக்ரைனில் அரசுக்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான போர் நிறுத்த உடன்பாடு கையெழுத்தாகி நேற்று முன்தினம் 1 மாதம் நிறைவடைந்தது. என்றாலும் இந்த உடன்பாடு பெயரளவில் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.
இந்த உடன்பாடு கடந்த செப்டம்பர் 5-ம் தேதி, பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் கையெழுத்தானது. கிழக்கு உக்ரைனில் இரு தரப்புக்கும் 6 மாதங்களாக நிலவிவந்த மோதலில் சுமார் 3,300 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், இம்மோதலை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் இந்த உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி இரு படைகளுக்கும் இடையே 30 கி.மீ. தொலைவுக்கு சண்டையில்லா பகுதியாக நீடிக்க வேண்டும்.
இந்நிலையில் கிளர்ச்சியாளர்கள் டானெட்ஸ்க் விமான நிலையம் மீதும் ராணுவ நிலைகள் மீது தாக்குதலை நிறுத்தினால் மட்டுமே எங்களால் பின்வாங்கிச் செல்ல முடியும் என ராணுவம் கூறிவிட்டது. உக்ரைன் ராணுவ செய்தித் தொடர்பாளர் வோலோதிமிர் பால்யோவி நேற்று முன்தினம் கூறும்போது, “டானெட்ஸ்க் விமான நிலையம் மீது கிளர்ச்சியாளர்கள் கடந்த 24 மணி நேரத்தில் பீரங்கிகள் மூலம் 2 முறை குண்டுகள் வீசினர். நாங்கள் பதில் தாக்குதல் நடத்தி அவர்கள் பின்வாங்கச் செய்தோம்” என்றார்.
இம்மோதலில் ராணுவ வீரர்கள் தரப்பில் இருவரும் பொதுமக்கள் தரப்பிலும் மூவரும் உயிரிழந்தனர். இதன் மூலம் போர் நிறுத்த உடன்பாடு கையெழுத்தான பிறகு இருதரப்பு மோதலில் இறந்தவர் எண்ணிக்கை ராணுவம் மற்றும் பொதுமக்கள் தரப்பில் மட்டும் 80 ஆக உயர்ந்துள்ளது.
கிளர்ச்சியாளர்கள் தங்கள் இணைய தளத்தில் சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ராணுவ தாக்குதலால் டானெட்ஸ்க் நகருக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை பட்டியலிட்டுள்ளனர். இறுதியில் சண்டையை விட உடன்பாடு மிக மோசமானது என்று குறிப்பிட்டுள்ளனர்.
மோதலில் ஈடுபட்டு வந்தாலும் போர் நிறுத்த உடன்பாடு முறிந்ததாக இரு தரப்பும் அறிவிக்கவில்லை. கிழக்கு உக்ரைனில் போர்நிறுத்த உடன்பாட்டை கண்காணிக்க ஏற்கெனவே கண்காணிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கண்காணிப்புக்காக வரும் நாட்களில் பிரான்ஸ், ஜெர்மனி சார்பிலும் ஆளில்லா விமானங்கள் அனுப்பிவைக்கப்படும்” என்று பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT