Published : 11 Feb 2014 11:30 AM
Last Updated : 11 Feb 2014 11:30 AM
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீதான தேசத் துரோக குற்றச்சாட்டு வழக்கு தொடர்பான விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கியது. இந்த விசாரணையின்போது முஷாரப் தரப்பு வழக்கறிஞர் ஒருவர் தன்னை தாக்க முயற்சித்ததாக அரசு தரப்பு முதன்மை வழக்கறிஞர் அக்ரம் ஷேக் கூறியுள்ளார்.
அது தொடர்பாக சிசிடிவி கேமரா பதிவாகியுள்ள வீடியோவை பார்த்த பிறகு முடிவு செய்வதாக நீதிபதி பைசல் அராப் கூறினார். முஷாரபின் உடல் நலம் தொடர்பான மருத்துவ அறிக்கையை அவரின் வழக்கறிஞர் இலியாஸ் சித்திக் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். முஷாரபின் உடல்நலம் முழுமையாக குணமடைய
வில்லை என்று அவர் தெரிவித்தார். இந்த வழக்கின் அடுத்தடுத்த விசாரணைகளின்போது முஷாரப் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சித்திக் கோரிக்கை விடுத்தார். ஆனால், அதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
முஷாரப் திங்கள்கிழமை மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததற்கு அனுமதியளிப்பதாக தெரிவித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். முன்னதாக முஷாரப் பிப்ரவரி 18-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அவ்வாறு அவர் ஆஜராகாவிட்டால் ஜாமீன் இல்லாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முஷாரப் ஆட்சியிலிருந்தபோது 2007-ம் ஆண்டு அவசரகால நிலையை பிரகடனப்படுத்தினார். இது அரசமைப்புச் சட்டப்படி தவறானது என்று குற்றம் சாட்டப்பட்டு, அவர் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றபோது முஷாரப் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில் கடந்த ஜனவரி 2-ம் தேதி இதய நோய் பாதிப்பு காரணமாக ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT