Published : 06 Dec 2013 12:00 AM
Last Updated : 06 Dec 2013 12:00 AM
நாளொன்றுக்கு 500 கோடி தொலைபேசி உரையாடல்களை அமெரிக்காவின் உளவு அமைப்பான என்.எஸ்.ஏ. பதிவு செய்து வருவதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க உளவுத் துறை ஒட்டுக் கேட்கும் பணியில் ஈடுபட்டு வருவது குறித்து என்.எஸ்.ஏ. அமைப்பின் முன்னாள் ஊழியர் எட்வர்ட் ஸ்னோடென் வெளியிட்ட ரகசிய ஆவணங்கள் மூலம் தெரிய வந்தது. அந்த ஆவணங்களை ஆராய்ந்து பார்த்ததில் கோடிக்கணக்கான தொலைபேசிகளை அமெரிக்க உளவு அமைப்பு ஒட்டுக் கேட்டு வருவது தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர் எங்கிருக்கிறார் என்பதை கண்டறிவதற்காகவே இதுபோன்ற ஒட்டுக்கேட்பு நடவடிக்கைகளில் அந்த அமைப்பு ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத என்.எஸ்.ஏ.வுடன் தொடர்புடைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாங்கள் உலகெங்கும் இருந்து ஏராளமான தரவுகளை பெற்று வருகிறோம். அமெரிக்கா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த செல்போன் வலையமைப்புகளை தீவிரமாக கண்காணித்து தகவல்களை சேகரிக்கிறோம். இவை அனைத்தும் சம்பந்தப் பட்டவர் எங்கிருக்கிறார் என்பதை அறிவதற்காகத்தான் செய்துள்ளோம்.
பல்வேறு வெளிநாடுகளுக்கு லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் சுற்றுலா செல்கின்றனர். அவர்களின் செல்போன்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்றார். உளவு அமைப்பின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சட்டப்பூர்வமானது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
என.எஸ்.ஏ.வுக்கு தேவையான தகவல்கள் மிகவும் குறைவுதான். ஆனால், எது தனக்கு உபயோகமான தகவல் எனத் தெரியாததால், அனைத்தையும் பதிவு செய்து வருகிறது. வியாபாரம் தொடர்பாகவோ, தனிப்பட்ட முறையிலோ வெளி நாடுகளுக்குச் செல்லும் அமெரிக்கர்களின் இருப்பிட விவரங்களை, சந்திக்கும் நபர்கள் மற்றும் அவர்களுடனான பேச்சுகளை உளவு அமைப்பு சேகரிக்கிறது. அமெரிக்கர்கள் மட்டு மல்ல, பிற நாடுகளைச் சேர்ந்த முக்கிய நபர்களின் செல்போன்களும் இதுபோன்று ஒட்டுக்கேட்கப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT