Published : 03 Mar 2017 09:50 AM
Last Updated : 03 Mar 2017 09:50 AM
வட கொரிய அதிபரின் அண்ணன் கிம் ஜாங் நம் கொலையில் கைது செய்யப்பட்ட வட கொரியரை மலேசிய நீதிமன்றம் விடுவித்தது.
கடந்த மாதம் 13-ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அண்ணன் கிம் ஜாங் நம் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக டோன் தி ஹூங், சிட்டி ஆயிஷா ஆகிய 2 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிம் ஜாங் நம் கொலையில் வடகொரியாவைச் சேர்ந்த ஒருவரை மலேசிய போலீஸார் கைது செய்தனர். ஆனால், அவரை மலேசிய நீதிமன்றம் நேற்று விடுவித்தது. இதுகுறித்து அட்டர்னி ஜெனரல் முகமது அபன்டி அலி நேற்று கூறும்போது, ‘‘கிம் ஜாங் நம் கொலை வழக்கில், வடகொரியாவைச் சேர்ந்த 47 வயது ரி ஜோங் சோல் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான ஆதாரங்கள் எதுவும் இல்லாததால், அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமை (இன்று) அவர் விடுவிக்கப்படுவார். அவரிடம் சரியான ஆவணங்கள் எதுவும் இல்லாததால், மலேசியாவில் இருந்து அவர் உடனடியாக வெளியேற்றப்படுவார்’’ என்று தெரிவித்தார்.
மேலும், வடகொரியாவும் மலேசியாவும் நல்ல உறவுடன் இருந்தன. ஆனால், கிம் ஜாங் நம் கொலைக்குப் பின்னர் இரு நாட்டு உறவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ப விசா இல்லாமல் இரு நாட்டு மக்களும் பரஸ்பரம் பயணம் மேற்கொள்ளும் சலுகையை மலேசிய அரசு உடனடியாக ரத்து செய்துவிட்டது. அத்துடன் வடகொரியாவுடனான தூதரக உறவையும் முறித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
கிம் ஜாங் நம் கொலையில் மேலும் 7 வடகொரியர்களை மலேசிய போலீஸார் தேடி வருகின்றனர். அவர்களில் 4 பேர் வடகொரியா தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. மற்ற 3 பேர் மலேசியாவில் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதற்கிடையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உத்தரவின்பேரில்தான், கிம் ஜாங் நம் கொலை செய்யப்பட்டதாக தென்கொரிய அரசு குற்றம் சாட்டி உள்ளது. -
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT