Published : 16 Oct 2014 10:04 AM
Last Updated : 16 Oct 2014 10:04 AM
அருணாசலப்பிரதேசத்தில் மக்மோகன் எல்லைக் கோடு நெடுகிலும் சாலை அமைக்கும் இந்தியா வின் திட்டத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
எல்லைப் பிரச்சினையில் இறுதித் தீர்வுக்கு வருவதற்கு முன், தற்போதுள்ள நிலைமையை மேலும் சிக்கலாக்கும் வகையில் இந்தியா எந்தவொரு நடவடிக்கை யிலும் ஈடுபடாது என நம்புகிறோம் என்று சீனா கூறியுள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ நேற்று செய்தியாளர் களிடம் கூறும்போது, “இத்திட்டம் தொடர்பான அறிவிப்பை நாங்கள் உறுதிசெய்ய வேண்டியுள்ளது. சீனா – இந்தியா இடையிலான எல்லைப் பிரச்சினை காலனி ஆதிக்க காலத்தில் விட்டுச் செல்லப்பட்டது. இந்தப் பிரச்சினையை நாங்கள் உரிய முறையில் தீர்க்க வேண்டியுள்ளது” என்றார்.
மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு அண்மையில் கூறும்போது, “எல்லையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீனா மேம்படுத்தி வருவதால் அதற்கு இணையாக நாமும் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. அருணாசலப்பிரதேசத்தின் சாங்லாங் மாவட் டத்தில் சர்வதேச எல்லையை (மக்மோகன் கோடு) ஒட்டி சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது” என்றார்.
இந்நிலையில் இத்திட்டத்துக்கு சீனா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ மேலும் கூறும்போது, “சீன – இந்திய எல்லையில் கிழக்குப் பகுதியில் பிரச்சினை உள்ளது. இதில் இறுதித் தீர்வுக்கு வருவதற்கு முன் நிலைமையை மேலும் சிக்கலாக்கும் வகையில் எந்தவொரு நடவடிக்கையிலும் இந்தியா ஈடுபடாது என நம்புகிறோம். எல்லையில் அமைதியை பேணும் நடவடிக்கையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும். இதன் மூலம் இறுத் தீர்வுக்கு உகந்த சூழ்நிலை ஏற்படுத்தப்படும்” என்றார்.
சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட திபெத்தில் 5 விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் சாலை மற்றும் ரயில் பாதை திட்டங்களும் விரிவான அளவில் செய்யப்படுகின்றன. தொலைதூரப் பகுதியான திபெத் மேம்படுத்தும் வகையில் இத்திட்டங்கள் நடைபெறுவதாக சீனா கூறுகிறது. என்றாலும் இவற்றின் மூலம் ராணுவத் துருப்புகள் மற்றும் தளவாடங்களை இமயமலைப் பகுதிக்கு சீனா மிக விரைவாக கொண்டுவர முடியும் என்பதால் இந்தியா கவலை அடைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT