Published : 20 Sep 2013 12:06 PM
Last Updated : 20 Sep 2013 12:06 PM

இந்தியாவுடனான அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்படும்

வரும் வாரம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரிடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இது இருநாடுகளின் உறவுக்குப் புதிய உந்து சக்தியாக அமைவதுடன், வர்த்தக மற்றும் பொருளாதாரச் சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும் என அமெரிக்க எம்.பி.க்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக எம்.பி.யும், வெளியுறவுத்துறை குழுத் தலைவருமான எட்வர்டு ராய்ஸ் கூறியதாவது: "இயற்கை எரிவாயுக்களுள் ஒன்றான களிமப்பாறை வாயு (ஷேல் கேஸ்) தொடர்பான ஏற்பாடுகள் இறுதி செய்யப்படும் என நம்புகிறேன். பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டுநடவடிக்கை, இது தொடர்பான தகவல் பரிமாற்றம் ஆகியவற்றில் கூடுதல் செயல்பாடுகள் மேற் ்கொள்ளப்படும் என நம்புகிறேன்.

வர்த்தகம் மற்றும் முதலீடுகளைப் பொருத்தவரை, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மிக சுதந்திரமான வர்த்தகம் என்பது முக்கியத்துவம் பெறுகிறது. ஆக்கப்பூர்வமான பயன்பாடு களுக்கான அணுசக்தி ஒப்பந்தம் சார்ந்து இன்னும் சில பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது" என்றார் அவர்.

களிமப்பாறை வாயு ஏற்றுமதி யில், இந்தியாவுடன் அமெரிக்கா தாராள வர்த்தக உடன்படிக்கை மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எம்.பி. ஜோ வில்சன் கூறியதாவது:

"பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டு நடவடிக்கை என்பது இதுவரை இல்லாத அளவுக்கு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவைப் போல் வேறு எந்த நாடும் இவ்வளவு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஆளாகியிருக்காது. இந்தியாவுடன் நெருங்கிய உறவுமுறையை நாங்கள் உணர்கிறோம்.

அணுசக்தி ஒப்பந்தம் அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும் என விரும்புகிறேன். இந்திய மக்களுக்கு இது நன்மை பயக்கும். நவீன சமூகத்தைக் கட்டமைப்பதற்கு, பாதுகாப்பான, நம்பத்தகுந்த எரிசக்தி ஆதாரம் தேவை. இந்தியா, அமெரிக்க மக்களுக்கு முழுமையாகப் பலனளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x