Published : 07 Jan 2014 11:31 AM
Last Updated : 07 Jan 2014 11:31 AM
வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் அவாமி லீக் கட்சி, நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தலைப் புறக்கணித்துள்ள நிலையில் 127 தொகுதிகளில் அவாமி லீக் வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வங்கதேச நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர் எண் ணிக்கை 350. இதில் 50 நியமன இடங்கள். இவை பெண்க ளுக்காக பிரத்யேகமாக ஒதுக் கப்படுகின்றன. மீதமுள்ள 300 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறும்.இந்த ஆண்டு பொதுத் தேர்தலை, வங்கதேச தேசியவாத கட்சி தலை மையிலான 18 கட்சிகள் அடங்கிய கூட்டணி புறக்கணித்தது. இதனால் 153 தொகுதிகளில் ஆளும் கட்சி வேட்பாளர்களும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட் பாளர்களும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 127 இடங்கள் ஆளும் அவாமி லீக்குக்கு கிடைத்துள்ளது.
147-ல் மட்டும் வாக்குப் பதிவு
மீதமுள்ள 147 தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. திங்கள்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு கள் அறிவிக்கப்பட்டன. இதில் 107 இடங்களை அவாமி லீக் கைப்பற்றியுள்ளது. அதன் கூட்டணி கட்சியான ஜாட்டியாவுக்கு 16 இடங்கள் கிடைத்துள்ளன. 12 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். மீதமுள்ள இடங்களில் சிறிய கட்சிகள் வெற்றிப் பெற்றுள்ளன.
நாடாளுமன்றத்தின் மொத்த பலமான 300 இடங்களில் அவாமி லீக் கட்சி 234 இடங்களைக் கைப்பற்றி நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவின்போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்க ளில் 21 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக 8 தொகுதிகளில் மட்டும் மறுவாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
புறக்கணிப்பு ஏன்?
வங்கதேச நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் கடந்த ஆண்டு அக்டோபர் 25-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன் பின்னரும் ஆளும் அவாமி லீக் ஆட்சியில் நீடித்ததால் எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தின. இதைத் தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா நவம்பர் மத்தியில் அமைச்சரவையைக் கலைத்து அனைத்து கட்சிகள் அடங்கிய புதிய அரசை அமைத்தார். இந்த அரசில் இணைய எதிர்க்கட்சிகள் மறுத்துவிட்டன.
அரசியல் கட்சிகள் சாராத காபந்து அரசை நியமித்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கலிதா ஜியா தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் வலியுறுத்தின. இதை ஆளும் கட்சி ஏற்க மறுத்துவிட்டதால் எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக பொதுத்தேர்தலைப் புறக்கணித்தன. இந்தப் பின்னணியில் வங்கதேசத்தில் இப்போதைக்கு அமைதி திரும்பாது, வன்முறைச் சம்பவங்கள் தொடர்வதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் எச்சரித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT