Last Updated : 06 Jan, 2014 10:35 AM

 

Published : 06 Jan 2014 10:35 AM
Last Updated : 06 Jan 2014 10:35 AM

மீண்டும் கல்லடி?

உலகில் வேறெந்த தேசத்திலும் இல்லாத அளவுக்குக் கடந்த வருஷம் ஆப்கனிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மிகத் தெளிவாக, தீர்மானமாக, ஆத்ம சுத்தியுடன் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன. தண்டனை என்ற பெயரில் சட்டபூர்வமாகவே நிறைவேற்றப்பட்ட கொடுமைகள் ஒரு பக்கம் என்றால், கிராமப்புற, ஆதிவாசி மக்கள் மத்தியில் கட்டைப் பஞ்சாயத்து கண்ணியவான்கள் தனியாவர்த்தனமாகச் செய்த அயோக்கியத்தனங்கள் அதைக் காட்டிலும் அதிகம்.

சிறைத்தண்டனை, பட்டினித் தண்டனை, பிரம்படி எல்லாம் இல்லை. காது அறுப்பு, மூக்கறுப்பு, உதடுகளைத் துண்டிப்பது என்று மிகக் குரூரமான தண்டனைகள். இந்தக் கொடுமை ஒரு பக்கமென்றால் முறை தவறிய உறவுகளுக்குத் தண்டனையாக முன்பு இருந்த கல்லால் அடித்துக் கொல்வது என்பதை தூசு தட்டி மீண்டும் மறு அறிமுகப்படுத்த ஹமீத் கர்சாயின் சட்டத்துறை அமைச்சகம் ரெட்டை ரெடி என்று பச்சைக்கொடி காட்டியிருக்கிறது.

உலகெங்கும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சட்டம் மீண்டும் நடைமுறைக்கு வருமானால் ஆப்கனிஸ்தானை அடியோடு மறந்து மண்ணைப் போட்டு மூடிவிட வேண்டியதுதான். இருபத்தியோராம் நூற்றாண்டின் மிச்சமிருக்கும் மாபெரும் காட்டுமிராண்டிக் கும்பல் என்று வருணிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இன்றுவரை தாலிபன்களையே முழுதாக அடக்கவோ அழிக்கவோ அமெரிக்காவால் முடியவில்லை. அடுத்த பொதுத் தேர்தலே நெருங்கிவிட்டது. ஆப்கனிஸ்தான் மக்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். அடிப்படை அசௌகரியங்களில் எந்த மாற்றமும் இல்லை. அதே அவலங்கள் அடுத்த எபிசோட் மாதிரி தொடரத்தான் செய்கின்றன.

இந்நிலையில் ஆப்கனிஸ்தானில் பெண்களைக் கொல்வது மிக எளிய காரியம்; ஏனெனில் அதற்குத் தண்டனையே கிடையாது என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார், சுரயா பக்ஸாத் என்னும் ஒரு சமூக சேவகர். ஆப்கனின் பல பிராந்தியங்களில் பெண்களுக்கான புனர்வாழ்வு மையம் நடத்தி வரும் இவர், இந்த தேசமளவு வேறெங்குமே பெண்கள் இத்தனை இழிவுபடுத்தப்படுவதில்லை என்று கொந்தளித்திருக்கிறார்.

தாலிபன்களை அடிப்படைவாதிகள் என்று முத்திரை குத்தி ஆட்சியில் இருந்து அகற்றியதோடு ஆப்கனின் அவலங்கள் முடிந்துவிடவில்லை. அறிவித்துக்கொள்ளாத அடிப்படைவாதிகளாகத்தான் அடுத்து வந்தவர்களும் இருந்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் பல நூற்றுக்கணக்கான அப்பாவி ஆப கானியப் பெண்கள் தாங்கள் செய்த சிறு தவறுகளுக்காக அங்கஹீனர்களாக்கப்பட்டிருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

கர்சாய் ஆட்சிக்கு வந்த பிறகு ஆப்கனில் சட்டங்கள் வெகுவாக திருத்தப்பட்டு ஒழுங்கு செய்யப்பட்டிருப்பது உண்மையே. ஆனாலும் பெண்களுக்கு எதிரான சட்டங்களில் எவ்வித குறிப்பிடத்தகுந்த மாற்றங்களும் நிகழவில்லை. இச்சூழலில் தாலிபன்கள் விரட்டப்பட்டு ஹமீத் கர்சாய் பதவிக்கு வந்து பன்னிரண்டு வருடங்கள் முடிந்திருக்கும் சூழ்நிலையில் கல்லடி தண்டனை மீண்டும் நடைமுறைக்கு வருமானால் கடவுள்கூட அவர்களை மன்னிக்க மாட்டார். தாலிபன்களை அகற்றியது போலவே இந்த நாகரிகக் காட்டுமிராண்டிகளையும் அப்புறப்படுத்தவேண்டிய கட்டாயம் உருவாகிக்கொண்டிருப்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x