Published : 13 Nov 2013 08:47 AM Last Updated : 13 Nov 2013 08:47 AM
நான் இந்தியாவுக்கு எதிரானவன் அல்ல; அதன் கொள்கைகளைத்தான் எதிர்க்கிறேன் - இம்ரான் கான் பேட்டி
நான் இந்தியாவுக்கோ அமெரிக்காவுக்கோ எதிரானவன் அல்ல, ஆனால் அவற்றின் கொள்கைகளை எதிர்க்கிறேன் என்று தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் தெரிவித்தார்.
அந்த நாட்டின் முன்னணி நாளிதழான எக்ஸ்பிரஸ் டிரிபியூனுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் அவர் கூறியது:
ஆப்கானிஸ்தான் தலிபான் அமைப்புகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேநேரம் தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்புடன் பாகிஸ்தான் அரசு பேச்சு நடத்துவதை வலுக்கட்டாயமாகத் தடுக்கிறது. ஏற்கனவே 3 முறை அமைதிப் பேச்சுவார்த்தையை அமெரிக்கா சீர்குலைத்திருக்கிறது.
இப்போது 4-வது முறையாக அமைதிப் பேச்சை தடுத்து நிறுத்தியுள்ளது. இதுபோன்ற விவகாரங்களில் பாகிஸ்தான் ஊடகங்கள் சரியான நேரத்தில் குரல் எழுப்பாமல் மெளனம் சாதிக்கின்றன.
அமெரிக்காவின் ஆவணப் போக்கு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதேநிலை தொடருமானால் வருங்காலத்தில் அமெரிக்காவை யாருமே மதிக்க மாட்டார்கள்.
முன்னாள் அதிபர் முஷாரப் நாட்டை படுபாதாளத்துக்கு தள்ளிவிட்டுவிட்டார். அதன் தீய பலன்களை பாகிஸ்தான் ராணுவமும் மக்களும் இப்போதும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் கட்சி பாகிஸ்தானின் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தால் நாட்டின் எல்லைப் பகுதிகளில் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்த அமெரிக்கா துணிந்திருக்காது. அமெரிக்காவின் நடவடிக்கையை கண்டித்து பெஷாவரில் வரும் 20-ம் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
எல்லையில் அப்பாவி பழங்குடியின மக்கள் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் தொடர்கிறது. அண்மையில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் தலிபான் இயக்கத் தலைவர் ஹசிமுல்லா மெஹ்மூத் கொல்லப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றார்.
நான் இந்தியாவுக்கு எதிரானவன் அல்ல, அதன் கொள்கைகளுக்குதான் எதிரானவன் என்றும் இம்ரான்கான் கூறினார். ஆனால், இந்தியாவின் எந்தக் கொள்கைகளை அவர் எதிர்க்கிறார் என்பதை தெரிவிக்கவில்லை.
WRITE A COMMENT