Published : 28 Feb 2014 11:53 AM
Last Updated : 28 Feb 2014 11:53 AM

பிரிட்டன் ராணுவ வீரர் ரிக்பியை படுகொலை செய்த தீவிரவாதிக்கு ஆயுள் காலம் முழுவதும் சிறை

லண்டன் நகரில் பிரிட்டன் ராணுவ வீரர் லீ ரிக்பி கடந்த ஆண்டு பட்டப்பகலில் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் காலம் முழுவதும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே 22ம் தேதி லண்டன் உல்விக் பகுதியில் உள்ள ராணுவ முகாமுக்கு வெளியே லீ ரிக்பி என்ற ராணுவ வீரர் பணியில் இருந்தார். அப்போது அவ்வழியே காரில் வந்த இருவர் திடீரென ரிக்பி மீது காரை ஏற்றினர். இதில் இடுப்பு ஒடிந்து கிடந்த ரிக்பியை தரதரவென்று நடு ரோட்டுக்கு இழுத்துச் சென்றனர்.

இருவரில் ஒருவன் ரிக்பி யின் கழுத்தை அறுத்தும், மற்றொருவன் கத்தியால் மாறிமாறி குத்தியும் ரிக்பியை கொடூரமாக கொலை செய்தனர். பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த கொலை அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

இக்கொடூர செயலில் ஈடுபட்ட மைக்கேல் அடிபொலாஜா (29), மைக்கேல் அடிபொவாலே (22) ஆகிய இருவரும் நைஜீரிய வம்சாவளி பிரிட்டன் குடிமகன்கள். இஸ்லாம் மதத்துக்கு மாறியவர்கள்.

தங்களை அல்லாவின் படை வீரர்கள் என்று கூறிக்கொண்ட இவர்கள், மத்திய கிழக்கு நாடுகளில் பிரிட்டன் வீரர்கள் இஸ்லாமியர்களை கொலை செய்வதை கண்டித்து, இக்கொடூர செயலை நிகழ்த்தியதாக கூறினர்.

இக்கொலை வழக்கில் புதன்கிழமை தீர்ப்பு வழங்கப் பட்டது. இதில் மைக்கேல் அடிபொலாஜாவுக்கு (29) ஆயுள் காலம் முழுவதும் சிறைத் தண்டனையும் (விதிவிலக்கான சூழ்நிலையில் உள்துறை செயலரின் ஒப்புதலுடன் மட்டுமே விடுதலை செய்ய முடியும்) மைக்கேல் அடிபொவாலேவுக்கு 45 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் (இடையில் பரோலில் செல்லும் அனுமதியுடன்) நீதிபதி விதித்தார்.

நீதிபதி நிகல் ஸ்வீனி தனது தீர்ப்பில், “நாட்டின் முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கும், அமைதியுடன் வாழ்ந்து வரும் முஸ்லிம் சமுதாயத்துக்கு இவ்விரு வரும் களங்கம் ஏற்படுத்தியுள் ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய மனித உரிமை சட்டங்களுக்கு உட்பட்டே பிரிட்டனில் ஆயுள் சிறைத் தண்டனை வழங்க முடியும் என்ற நிலையில், இத்தீர்ப்புக்கு அப்பீல் நீதிமன்றம் கடந்த வாரம் ஒப்புதல் அளித்திருந்தது.

இத்தீர்ப்பு குறித்து ரிக்பியின் குடும்பத்தினர் விடுத்துள்ள அறிக்கையில், “குற்றவாளிகளுக்கு மிகச்சரியான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ரிக்பியின் மரணத் துக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க கோரி நீதிமன்றத்துக்கு வெளியில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் 3 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x