Published : 31 Jan 2014 10:30 AM
Last Updated : 31 Jan 2014 10:30 AM
வங்கதேசத்தில் ஆயுதக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உல்பா தீவிரவாத இயக்கத் தலைவர் பரேஷ் பரூவா உள்பட 14 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
2004-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் 10 டிரக்குகளில் ஏற்றிச்செல்லப்பட்ட ஆயுதங்களை போலீஸாரும், கடலோரக் காவல் படையினரும் பறிமுதல் செய்தனர். 1,500 பெட்டிகளில் இருந்த தானியங்கி துப்பாக்கி, ஏ.கே. 47 ரக துப்பாக்கி, சீனத் துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், 27 ஆயிரம் கையெறி குண்டுகள், ஒரு கோடி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆயுதங்கள் அனைத்தும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உல்பா தீவிரவாதிகள் பதுங்கியுள்ள இடத்துக்குக் கொண்டு செல்லப்படுவதாக தெரியவந்தது.
இது தொடர்பாக உல்பா தீவிரவாத இயக்கத் தலைவர் பரேஷ் பரூவா, ஜமாத் – இ – இஸ்லாமி கட்சியின் தலைவர் மதியுர் ரஹ்மான் நிஜாமி உள்ளிட்ட 14 பேர் மீது சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருத்தல், ஆயுதக் கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரச் சட்டம் – 1974 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
பெருநகர சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி எஸ்.எம்.முஜிபுர் ரஹ்மான் வெளியிட்ட தீர்ப்பில், உல்பா தீவிரவாத இயக்கத் தலைவர் பரேஷ் பரூவா, ஜமாத் – இ – இஸ்லாமி கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதியுர் ரஹ்மான் நிஜாமி, முன்னாள் அமைச்சர் லுட்போஸாமன் பாபர், முன்னாள் தேசிய பாதுகாப்பு உளவுத்துறை அதிகாரி அப்துல் ரஹிம், முன்னாள் உளவுத்துறை தலைமை இயக்குநரக அதிகாரி ரெஸாகுல் ஹைதர் சவுத்ரி உள்ளிட்ட 14 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
இந்த 14 பேரில் பரூவாவும், வங்கேதச தொழிலாளர் நலத்துறை அமைச்சக முன்னாள் கூடுதல் செயலாளர் நூருல் அமீனும் தலைமறைவாக உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT