Published : 03 Mar 2014 12:11 PM
Last Updated : 03 Mar 2014 12:11 PM

பாதுகாப்பான மொபைல்போன் ‘போயிங்’ நிறுவனம் கண்டுபிடிப்பு

உரிமையாளரைத் தவிர மற்றவர்கள் திறக்க முயன்றால் தன்னில் உள்ள தகவல்களை அழித்துக் கொண்டு, வேறு யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு தன்னையும் அழித்துக் கொள்ளும் ஜேம்ஸ்பாண்ட் வகையிலான உலகின் மிகப் பாதுகாப்பான மொபைல் போனை போயிங் நிறுவனம் தயாரித்துள்ளது.

கூகுளின் ஆன்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் இந்த போன் இயங்கும். அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்கள் பாதுகாப்பான முறையில் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த போனின் மற்ற உயர் ரக பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. ஜிஎஸ்எம், டபிள்யூ சிடிஎம்ஏ மற்றும் எல்டிஇ தொழில்நுட்பங்களின் கீழ் செயல்படும் இரண்டு மைக்ரோ சிம்கார்டுகளை இந்த போனில் பயன்படுத்த முடியும். இந்தப் போனில் மேற்கொள்ளும் உரையாடல்களை மற்றவர்கள் இடைமறித்துக் கேட்பது சிரமம்.

தொலைக்காட்சியுடன் இணைத்துக் கொள்ளத் தக்க வகையில் எச்டிஎம்ஐ கேபிளை இணைப்பதற்கான வசதியும் இந்த மொபைல் போனில் தரப்பட்டு உள்ளது. யூஎஸ்பி, வைபை, புளூ டூத் போன்ற வசதிகளும் உள்ளன.

முதல்கட்டமாக இந்த போன்கள், அரசு மற்றும் ராணுவம், உள்நாட்டுப் பாதுகாப்பு போன்ற துறைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட குறைந்த அளவு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த உயர்ரக போனை விற்பனை செய்ய போயிங் திட்டமிட்டுள்ளது. அங்கீகரிக்கப் பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த போன் விற்பனை செய்யப்பட்டாலும், அவர்கள் இந்த போனின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல்களை வெளியிட மாட்டோம் என ஒப்பந் தத்தில் கையொப்பமிட வேண்டும்.

பொதுமக்களுக்கு இந்தப் போனின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பம் குறித்த தகவல்கள் வெளியிடப்படமாட்டாது எனவும் போயிங் அறிவித்துள்ளது. தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் தொழில்நுட்பம் இந்த போனின் உச்சபட்ச பாதுகாப்பு அம்சமாக இருக்கும்.

இந்த போன் திறக்க முடியாத அளவுக்கு வடிவமைக்கப் பட்டுள்ளது; மீறித் திறக்க முயன்றால் அதிலுள்ள அனைத் துத் தகவல்களும் அழிந்து விடும். பிளாக் போன் எனப் பெயரிடப்பட்ட இந்த போனுக்கு மாற்று உதிரிபாகங்கள் எதுவும் இல்லை. உதிரிபாகங்களை மாற்ற முயன்றாலும் போன் அழிந்து விடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x