Published : 15 Mar 2014 11:42 AM
Last Updated : 15 Mar 2014 11:42 AM

விசா மோசடி வழக்கு: தேவயானி மீது புதிய குற்றப்பத்திரிகை, கைது வாரன்ட்

நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராக பணியாற்றிய தேவயானி கோப்ரகடே (39) மீது விசா மோசடி வழக்கில் அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதனையடுத்து சனிக்கிழமை அவருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

தனது வீட்டு பணிப் பெண் சங்கீதாவுக்கு சட்டத்துக்கு புறம்பாக குறைத்து ஊதியம் கொடுத்தார், ஒப்பந்தத்துக்கு மாறாக கூடுதலான நேரம் அவரிடம் வேலை வாங்கினார் என தேவயானி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் டிசம்பர் 12-ம் தேதி கைது செய்யப்பட்டார் தேவயானி. அதன் பிறகு அவர் டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டார். தேவயானியின் கணவரும், இரு குழந்தைகளும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தேவயானி அமெரிக்கா சென்றால் கைது செய்யப்படுவார்.

தேவயானிக்கு எதிராக 21 பக்கங்கள் கொண்ட புதிய குற்றப்பத்திரிகை மன்ஹாட்டனில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து மன்ஹாட்டனில் உள்ள அமெரிக்க அரசு வழக்கறிஞர் பிரீத் பராரா அமெரிக்க மாவட்ட நீதிபதி வில்லியம் பாலேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘தேவயானிக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்படும் பட்சத்தில் உடனடியாக இந்த நீதிமன்றத்துக்கு அரசு தெரிவிக்கும். அதற்கேற்ப தேவயானியை நீதிபதியின் முன் ஆஜர் செய்வதற்கான ஏற்பாடுகளை திட்டமிடலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

தேவயானி மீதான முந்தைய குற்றப்பத்திரிகையை அமெரிக்க நீதிமன்றம் ஒன்று புதன்கிழமை நிராகரித்த நிலையில் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டின் விசா விண்ணப்பத்தில் பொய்யான தகவல் கொடுத்து விசா மோசடி செய்தார் என்பது தேவயானி மீதான முக்கிய குற்றச்சாட்டு

பணிப்பெண்ணுக்கு விசா வாங்குவதற்காக அமெரிக்க அதிகாரிகளிடம், தேவயானி தெரிந்தே பொய்யான பல தகவல்களை கொடுத்திருக்கிறார். அமெரிக்க வெளியுறவுத் துறையிடம் தான் வழங்கிய, பணிப்பெண்ணின் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் தரப்பட்டுள்ள பல தகவல்கள் பொய் என்பதும் அவருக்கே தெரியும்.

பணிப்பெண்ணுக்கு அமெரிக்க சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ஊதியத்தை கொடுக்க தேவயானி விரும்பவில்லை. நிர்ணயித்த பணி நேரத்தை விட கூடுதலாக வேலை வாங்குவதை தடுப்பதற்கான பாதுகாப்புகளையும் அவர் வழங்கவில்லை.

வேலை வாய்ப்பு ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் பற்றிய உண்மை நிலவரத்தை அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிவித்தால் பணிப் பெண்ணுக்கு விசா கிடைக்காது என்பதை தெரிந்துகொண்ட தேவயானி, பொய் தகவல்களை தெரிவித்துள்ளார் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசா மோசடி புகார் தொடர்பாகவும், தனது பணிப் பெண்ணுக்கான விசா விண்ணப்பத்தில் பொய் தகவல்களை கொடுத்தார் என்பதற்காகவும் தேவயானி கைது செய்யப்பட்டார். அவரை கிரிமினல் குற்றவாளிகளுடன் சிறையில் அடைத்தது மற்றும் ஆடைகளை களைந்து சோதனையிட்டது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு கசக்க காரணமானது. இந்தியாவும் பதிலடியாக தமது நாட்டில் உள்ள அமெரிக்க தூதர்களுக்கான சிறப்புச் சலுகைகளை குறைத்தது. தேவயானியோ தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார்.

(சங்கீதாவின் கணவர்) ரிச்சர்டின் பாஸ்போர்ட்டை வாங்கிவைத்துக் கொண்டு 3 வருட பணி ஒப்பந்தம் காலாவதியான பிறகே அதை திருப்பித் தருவேன் என தேவயானி சங்கீதாவிடம் தெரிவித்திருக்கிறார் எனவும் குற்றப்பத்திரிகையில் அமெரிக்கஅரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

தேவயானியும் மற்றவர்களும் பணிப்பெண்ணையும் அவரது குடும்பத்தாரையும் மிரட்டி அடங்க வைத்து இந்திய அதிகாரிகளிடமும் நீதிமன்றங்களிலும் பொய் சொல்லும்படி எல்லாவகையான குறுக்கு வழிகளையும் கையாண்டுள்ளனர்.

பணிப்பெண் சங்கீதாவுக்கு மாதத்துக்கு 4500 டாலர் வழங்கியதாக தெரிவித்த தேவயானி உண்மையில் மணிக்கு 3 டாலர் மட்டுமே வழங்கியுள்ளார். ஒப்பந்தத்துக்கு மாறாக கூடுதல் மணி நேரம் வேலை வாங்கியிருக்கிறார் என்றும் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர்.

தேவயானி வழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள திருப்பம் பற்றி அவரது தரப்பு வழக்கறிஞர் டேனியல் அர்சக் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

இந்தியா கடும் கண்டனம்

இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறியதாவது: இந்தியாவை பொருத்தமட்டில் இந்த வழக்கு தகுதி வாய்ந்ததாக தெரியவில்லை. தேவயானி இப்போது இந்தியாவுக்கு வந்துவிட்டார். இந்தியாவுக்குள் அமெரிக்க நீதிமன்றம் என்ன செய்ய முடியும், அதற்கு அதிகாரம் ஏதும் இல்லை. எனவே இந்த வழக்கில் அமெரிக்க சட்ட அமைப்பின் கீழ் அரசு எதையும் செய்ய இயலாது. தேவயானி மீதான முந்தைய குற்றப்பத்திரிகையையும் கைது வாரன்டையும் சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றம் ஒன்று நிராகரித்த நிலையில் இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட அமெரிக்க துறை செயல்பட்டுள்ளது ஏமாற்றத்தையே தருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஜாமீன் தொகையாக 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர் செலுத்தி வழக்கிலிருந்து தேவயானி விடுதலை பெற்றார். தூதரக பதவிக்குரிய சிறப்பு விலக்கும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10-ம் தேதி இந்தியா திரும்பிய அவர் டெல்லியில் தற்போது வெளியுறவு அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x